நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்ற இந்தப் பாலம் மும்பை சிவ்ரியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிகிறது.

நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது ‘மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்’ என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு ‘அடல் சேது’ என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டது.

இந்தப் பாலத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணி 2018-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் திகதி தொடங்கியது. சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது.

ரூ.17 ஆயிரத்து 843 கோடி செலவில் பிரமாண்டமாக வடிவம் பெற்றுள்ள இந்த பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.

மும்பை- நவிமும்பை இடையே 15 கி.மீ. பயண தூரத்தையும், ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக பயண நேரத்தையும் குறைக்கிறது.

இந்தப் பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள், 3 சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

இந்நிலையில், நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதில் முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் அமைச்சர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகையையொட்டி மும்பை, நவிமும்பை மற்றும் நாசிக் நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

CATEGORIES
TAGS
Share This