ஏமன் மீது அமெரிக்கா, பிரித்தானியா தாக்குதல்!
ஏமன் நாட்டில் ஹவுதிகள் தொடர்புடைய இலக்குகள் மீது அமெரிக்காவும், பிரித்தானியாவும் தாக்குதல் நடத்தியுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் செங்கடலில் சர்வதேச கப்பல்கள் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்களை ஏமனில் உள்ள சாட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன். “தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “எங்களுடைய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் கப்பல்கள் செல்லும் வழித்தடத்தின் சுதந்திரத்தை கெடுக்கும் எந்த செயலையும் நாங்களோ எங்களது கூட்டாளிகளோ பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை இந்தத் தாக்குதல்கள் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.
ஹவுதிகள் நேரடியாக அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். செங்கடல் வணிகப் பாதையைப் பாதுகாக்க அமெரிக்கா தலைமையிலான ‘ஆபரேஷன் பிராஸ்பெரிட்டி கார்டியன்’-க்கு 20க்கு அதிகமான நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அவுஸ்திரேலியா, பெஹ்ரைன், கனடா மற்றும் நெதர்லாந்து இந்த ஆபரேஷனை ஆதரித்துள்ளன. என்றாலும் தற்போதைய அமெரிக்கா, பிரித்தானியா தாக்குதல் அந்த ஆபரேஷனுடன் தொடர்புடையது இல்லை.ஹவுதிகளின் பொறுப்பற்ற தாக்குதல்களுக்கு சர்வதேச சமூகத்தின் பதிலடி ஒற்றுமையானது உறுதியானது” என்று அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணிகக் கப்பல்களை அச்சுறுத்தும் ஹவுதிகளின் தாக்குதல்களுக்கு எதிரான முதல் அடி இது” என்று தெரிவித்துள்ளது.
தலைநகர் சானா, சாதா, தாமர் மற்றும் ஹொடைடா பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன என்பதை ஹவுதி அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த தாக்குதல்களை அவர்கள்,‘அமெரிக்கா – சியோனிஸ்ட் – பிரித்தானிய ஆக்கிரமிப்பு’ என்று வர்ணித்துள்ளனர்.
தாக்குதல் குறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், “விமானம், கப்பல் மற்றும் நீர்முழ்கி மூலமாக தாக்குதல் நடத்தப்படுகின்றன. 12-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்த தாக்குதல்கள் ஹவுதிகளின் இராணுவ வலிமையை பலவீனப்படுத்துவதற்கானது. இது வெறும் அடையாளத்துக்கான தாக்குதல் இல்லை” என்றார்.
சானா விமானநிலையம் அருகில் உள்ள இராணுவ தளம், டைஸ் விமான நிலையம் அருகே உள்ள இராணுவ தளம், ஹொடைடாவில் உள்ள ஹவுதிகளின் கப்பல் தளம் மற்றும் ஹஜ்காவில் உள்ள இராணுவத் தளங்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஹவுதி தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
செங்கடல் பாதையில் செல்லும் சர்வதேச கப்பல்கள் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் அழைப்பு விடுத்தும் ஹவுதிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. கடந்த அக்டோபரில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் வெடித்தில் இருந்து ஏமனில் இயங்கி வரும் ஹவுதிகள் செங்கடலில் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏமன் உள்நாட்டுப் போரில் பெரும் பகுதியை கைப்பற்றிய ஹவுதிகள் ஹமாஸ்களுக்கு ஆதரவாக இஸ்ரேஸ் துறைமுகத்துக்கு செல்லும் அந்நாட்டுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவித்திருந்தனர் என்றாலும் தாக்கப்பட்ட கப்பல்களில் பெரும்பாலானவை இஸ்ரேலுடன் தொடர்பு இல்லாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பா – ஆசியா இடையேயான கப்பல் போக்குவரத்தில் 15 சதவீதம் பங்கு வகிக்கும் முக்கிய கடல் வணிகப்பாதையான செங்கடல் பாதையில் இதுவரை 27 கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏடன் வளைகுடாவில் உள்ள சர்வதேச கப்பல் பாதையில் ஹவுதிகள் கப்பல் எதிர்ப்பு பால்லிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. கடந்த நவம்பர் 19ஆம் திகதியில் இருந்து நடந்த தாக்குதல்களில் இது 27ஆவது தாக்குதலாகும். ஜனவரி 9ம் திகதி செங்கடலில் ஹவுதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களுக்கு சில நாட்களுக்கு பின்னர், அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஏமன் மீதான இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளன.