எதிர்கால சந்ததியிரும் அறிந்து உணர்ந்து படித்தலே ஓர் எழுத்தாளனின் வெற்றியாகும்!; பிரிஸ்பேர்ன் நூல் வெளியீட்டில் தாமரைச் செல்வி உரை !

எதிர்கால சந்ததியிரும் அறிந்து உணர்ந்து படித்தலே ஓர் எழுத்தாளனின் வெற்றியாகும்!; பிரிஸ்பேர்ன் நூல் வெளியீட்டில் தாமரைச் செல்வி உரை !

பிரிஸ்பேர்னில் உள்ள மவுண்ட் ஒமாணி நூலக (Mt Ommaney Library) மண்டபத்தில் ஆகஸ்ட் நாலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன் ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்களின் வெளியீடு சிறப்புற
நடைபெற்றது.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்துரையை ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் ‘தாமரைச் செல்வி’ திருமதி. ரதிதேவி கந்தசாமி அவர்கள் ஆற்றினார். அத்துடன் தமிழ் வாழ்த்துப் பாடலை பிரிஸ்பேர்ன் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் சிறப்புற பாடினர்.

வன்னி மண்ணின் மணம் கமழும் பெண் ஆளுமையான எழுத்தாளர் தாமரைச்செல்வி ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப் பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். இந்நிகழ்வில் அவர் உரையாற்றுகையில் ஓர் எழுத்தாளனின் வாழ்வியல் வெற்றியானது அவனது எழுத்தை எதிர்கால சந்ததியிரும் அறிந்து உணர்ந்து படிப்பதிலேயே தங்கியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

யுத்தகால வன்னியின் வரிகளை யதார்த்த பூர்வமாக எழுத்துருவில் வடித்த “தாமரைச்செல்வி” ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் முதன்மையான ஒருவர். 1973 முதல் சிறுகதைகளையும் பல புதினங்களையும் எழுதிவரும் தாமரைச்செல்வி ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருதும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் தலைமையுரையை அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், குயின்ஸ்லாந்து கிளையின் மூத்த செயற்பாட்டாளர் திரு. செந்தில் குமரன் அவர்கள் ஆற்றினார். பின்னர் பாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை இலக்கிய ஆர்வலர் திரு. சிவா கைலாசம் நிகழ்த்தினார். அதன்பின் ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை டாக்டர். துஷ்யந்தன் திசைநாயகம் அவர்கள் ஆற்றினார்.

இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை
திரு. ரஜினிகாந்த் ஜெயராமன் அவர்கள் தமிழக இலக்கிய ஆர்வலாராக இருப்பினும், ஈழத்து ஊடகவியலைப் பற்றி சிறப்புற உரை நிகழ்த்தினார்.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், குயின்ஸ்லாந்து கிளையின் அனுசரணையில் நடைபெற்ற இந்நூல்கள் வெளியீடும் இலக்கிய அரங்கில் பெருந்திரளான பிரிஸ்பேர்ன் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில்
ஏற்புரையை நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்தினார்.

CATEGORIES
Share This