தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே நடைபயண நிகழ்ச்சியின்போது தேவாலயத்துக்குள் சென்ற அண்ணாமலையை தடுத்த இளைஞர்களிடம் தகராறு செய்ததாக அவர் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 7 மற்றும் 8-ம் திகதிகளில் தருமபுரி மாவட்டத்தில், ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டார். இதில், 8-ம் திகதி பொம்மிடி அடுத்த பி.பள்ளிப்பட்டி பகுதியில் நடைபயணம் சென்றபோது அங்குள்ள லூர்து அன்னை ஆலயத்தில் லூர்து அன்னைக்கு மாலை அணிவிக்கச் சென்றார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரை தடுத்து, ‘மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தில் கிறித்தவ மக்கள் உயிரிழக்கவும், தேவாலயங்கள் இடிக்கப்பட்டதற்கும் அங்குள்ள பாஜக அரசு தான் காரணம். எனவே, புனிதமான இடமான எங்கள் தேவாலயத்துக்குள் நீங்கள் வரக்கூடாது’ என்று வாக்குவாதம் செய்தனர்.
அப்போது அண்ணாமலையும், ‘தேவாலயத்துக்கு வர அனைவருக்கும் உரிமை உள்ளது. மணிப்பூரில் நடந்தது இரு பழங்குடியினங்களுக்கு இடையிலான மோதல். என்னை தடுத்தால் இங்கே 10 ஆயிரம் பேரை வரவழைத்து தர்ணாவில் ஈடுபடுவேன்’ என்று வாக்குவாதம் செய்தார். அதன்பின்னர், போலீஸார் அந்த இளைஞர்களை அகற்றிய நிலையில் அவர் தேவாலயத்தில் வழிபாடு நடத்திச் சென்றார்.
இந்நிலையில், பொம்மிடி காவல் நிலையத்தில் இது தொடர்பாக கார்த்திக் (28) என்ற இளைஞர் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது பொம்மிடி போலீஸார், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெவ்வேறு வகுப்புகளிடையே பகை மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கதுடன் பேசியது உள்ளிட்ட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் (153 (ஏ), 504, 505(2)) நேற்று (ஜன. 10) வழக்குப்பதிவு செய்தனர்.