வாடகைத்தாய் முறை கண்ணியமற்றது – போப் பிரான்சிஸ்

வாடகைத்தாய் முறை கண்ணியமற்றது – போப் பிரான்சிஸ்

உலகம் முழுவதும் வாடகைத் தாய் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார், போப் பிரான்சிஸ்.

உலக அமைதிக்கும் மனிதர்களின் கண்ணியத்துக்கும் ஆபத்து விளைவிக்கும் நிகழ்வுகள் குறித்து பேசிய அவர், வாடகைத்தாய் என்பது இழிவான முறை என விமர்சித்துள்ளார்.

அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும், அதனை பலவீனப்படுத்தும், சில இடங்களில் இல்லாமலே ஆக்கும் நேரத்தில் 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ளதாகத் தெரிவித்த அவர் வாடகைத் தாய் முறை குறித்து பேசும்போது, “வாடகைத்தாய் முறை மூலம் பெறுகிற தாய்மை என்பது இழிவானது, பெண் மற்றும் அந்தக் குழந்தையின் கண்ணியத்தின் மீதான வன்முறை இது, தாயின் பொருளாதார தேவையின்பொருட்டு அவளைச் சுரண்டல் செய்யும் அடிப்படையில் அமைவது” என விமர்சித்துள்ளார்.

குழந்தை என்பது பரிசுப்பொருள் போன்றது, வணிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைவதல்ல என அவர் பேசியுள்ளார்.

‘கருப்பையை வாடகைக்கு விடும்’ நிகழ்வு எனக் குறிப்பிட்டு முன்னரே அவர் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். ஆனால் வாடிகன் சபை ஒரே பாலினத்தைச் சேர்ந்த இணையர்கள் வாடகைத்தாய் முறையில் பெறும் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்விக்க அனுமதித்தது.

ஏற்கெனவே ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் வாடகைத்தாய் முறைமைக்குத் தடை உள்ளது. அமெரிக்காவில் இது சாதாரணமாகிய நடைமுறை. வாடகைத்தாய் பாதுகாப்பு மற்றும் மருத்துவ காப்பீடு, குழந்தையின் சட்ட அடிப்படையிலான பெற்றோருக்கான விதிகள் ஆகியவை அங்கு நடைமுறையில் உள்ளன.

இந்த நிலையில், விமர்சகர்கள், வாடகைத்தாய் முறை என்பது ஏழை பெண்களை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக தெரிவிக்கிறார்கள்.

ஆதரவாளர்கள், குழந்தைகள் வேண்டிய பெற்றோருக்கு உதவுவதற்கான வாய்ப்பு என வாதிடுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This