5ஆவது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா (UPDATE)

5ஆவது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா (UPDATE)

வங்காளதேசம் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதனால் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காளதேச நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.

300 இடங்களில் 264 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டபோது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதன் கூட்டணி கட்சியான ஜதியா கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

வங்காளதேசத்தில் மொத்தம் 350 தொகுதிகள் உள்ளன. இதில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே 300 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். ஆனால் ஒரு வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (08) வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலை நியாயமான முறையில் நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும். அதன் தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆளும் அவாமி லீ கட்சி தலைமையிலான அரசாங்கம் அதனை ஏற்கவில்லை.

இதனால் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மேலும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைவருமான கலீதா ஜியா (வயது 78) வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்ட 5 பாடசாலைகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது.

இந்த பதற்றத்துக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (08) பொதுத்தேர்தல் நடைபெற்றது. எனவே தேர்தலை அமைதியான முறையில் நடத்த நாடு முழுவதும் போலீசார், ராணுவத்தினர் என சுமார் 7½ லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

CATEGORIES
TAGS
Share This