ரணிலின் வருகையால் பயனேதும் இல்லை!
ஜனாதிபதியின் வவுனியா வருகையானது சம்பிரதாய பூர்வமான ஒரு நிகழ்வே தவிர அதனால் பயன் ஏதும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.இதன்போது நிலஅபகரிப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நாம் அவருடன் பேசியிருந்தோம். நாம் கூறும் விடயங்கள் உடனடியாக தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் சென்றிருந்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. நாங்கள் கேட்ட விடயங்களிற்கான சரியான பதிலை அவர் தரவில்லை. சம்பிரதாயபூர்வமான ஒரு கூட்டமாகவே இது இடம்பெற்றது.
இதேவேளை ஜனாதிபதி வந்துசென்ற பின்னர் வவுனியா புதியபேருந்து நிலையத்தில் இராணுவமுகாம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அது என்ன தேவைக்காக அமைக்கப்பட்டது என்ற விடயம் தெரியவில்லை. எமது மக்களை அச்சுறுத்துவதற்கான செயற்பாடே அது. ஏறகெனவே பொலிஸ் சோதனைசாவடி அங்கு இருக்கின்றது.இந்நிலையில்இராணுவத்தின் தேவை என்ன என்று புரியவில்லை. இது தொடர்பாக நாம் பாராளுமன்றில்பேசுவோம்.
அத்துடன் அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மோசமானதாகவே உள்ளது. அதன்மூலம் ஜனநாயக போராட்டங்கள் தடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது. பத்திரிகை சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பமும் உள்ளது. இதற்கு நாம் பாராளுமன்றத்தில் எதிர்ப்பைக்காட்டுவோம். இந்தசட்டம் ஒழிக்கப்படவேண்டும் என்பதே ஐநா சபையின் நிலைப்பாடாக உள்ளது. எனினும் இலங்கை அரசாங்கம் அதனை ஏமாற்றிவருகின்றது என்றார்.