விண்வெளியில் 180 வாட்ஸ் மின்சாரம் தயாரிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனை!

விண்வெளியில் 180 வாட்ஸ் மின்சாரம் தயாரிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனை!

கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் எனும் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி 1-ம் திகதி பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ. உயரம்கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் கருந்துளை, நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கம், விண்மீன் வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து 5 ஆண்டுகளுக்கு ஆய்வு செய்யப்பட உள்ளது.

இதுதவிர பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிப் பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில் போயம் (POEM-PSLV Orbital Experimental Module) எனும் பரிசோதனையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதாவது, செயற்கைக்கோளை நிலைநிறுத்திய பின்னர் பிஎஸ்-4 இயந்திரத்தின் உயரமானது 350 கி.மீட்டருக்கு கீழே கொண்டுவரப்பட்டு பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த இயந்திரத்தில் இந்திய ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் தயாரித்த 10 ஆய்வுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பிஎஸ் 4 இயந்திரத்தில் இருந்த எப்சிபிஎஸ் (Fuel cell Power System-FCPS) கருவி மூலம் மின்சார தயாரிப்பு சோதனை தற்போது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும்போது, ‘‘பிஎஸ் 4 இயந்திரத்தில் இருந்த ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவை கொண்டு, ஃப்யூல் செல் கருவி மூலம் 180 வாட்ஸ் அளவுக்கு மின்னாற்றல் உற்பத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய மின்னாற்றல் உற்பத்தியால் விண்ணில் மாசு ஏற்படாது. இந்த சோதனை எதிர்காலத்தில் சூரியஒளியின்றி விண்வெளியில் மின்னாற்றல் தேவையை பெற முடியும் என்பதை உறுதிபடுத்தியுள்ளது. மேலும்,இதன்மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்போது தண்ணீர்மற்றும் மின்னாற்றல் தேவைகளையும் இத்தகைய வழிகளில் நாம் பூர்த்தி செய்துகொள்ளலாம்’’ என்றனர்.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்டநாடுகள் ஏற்கெனவே விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளன.அந்த வரிசையில் இந்தியாவும் தற்போது சேர்ந்து புதிய சாதனையை படைத்துள்ளது. இதற்கு காரணமான ஃப்யூல் செல் கருவியானது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தால் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This