இந்தியாவின் அதானியின் மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி?

இந்தியாவின் அதானியின் மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி?

இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் நிறுவனங்களால் ஆரம்பிக்கப்படவிருந்த மன்னார் காற்றாலை மின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டதாக இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

குறித்த நிறுவனத்தை விட குறைந்த விலையில் மின்சாரம் வழங்க மூன்று உள்ளூர் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், நாட்டின் மின்சார உற்பத்தி வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மின் உற்பத்தி செலவைக் குறைக்க எரிபொருளின் பயன்பாட்டைக் குறைத்து, ஏனைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நாட வேண்டும் என்றும் இயற்கை ஆற்றல் உற்பத்திக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் எரிசக்தி துறையில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் முதலாளிகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கௌதம் அதானிக்கு எதிராக அந்நாட்டு அதிகாரிகள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் பின்னர் இலங்கையில் அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட முதலீடுகள் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

அதானி நிறுவனம் ஏற்கனவே இலங்கையில் பல பெரிய முதலீடுகளைச் செய்துள்ளது. ஜோன் கீல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டமே பிரதானமான ஒன்றாகும். இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இதற்காக அதானி நிறுவனம் அமெரிக்க அரசின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து 553 மில்லியன் டொலர்கள் கடனாக பணத்தை முதலீடு செய்துள்ளது.

இதேவேளை இலங்கையில் அதானியின் முதலீடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கலந்துரையாடலில் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் முக்கிய இடத்தை பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

CATEGORIES
Share This