வட கிழக்கிற்கு உடனடியாக உதவிகளை வழங்குங்கள்; கனேடிய தமிழ் காங்கிரஸ் அழைப்பு

வட கிழக்கிற்கு உடனடியாக உதவிகளை வழங்குங்கள்; கனேடிய தமிழ் காங்கிரஸ் அழைப்பு

கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசியமான உடனடி உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் கனேடிய தமிழ் காங்கிரஸ், அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இயலுமான நன்கொடைகளை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து புலம்பெயர் தமிழர் அமைப்பான கனேடிய தமிழ் காங்கிரஸ் மேலும் தெரிவித்திருப்பதாவது:

நாட்டின் வட, கிழக்கு மாகாணங்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக தீவிர நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை ஆயிரக்கணக்கான மக்களை உடனடி உதவிகள் தேவைப்படும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

இந்த இயற்கை அனர்த்தத்தின் விளைவாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்திருப்பதுடன், மேலும் பலர் வெளிச்செல்ல முடியாமல் வீடுகளுக்குள் சிக்கியிருக்கிறார்கள்.

இந்நெருக்கடிக்கு மத்தியில் சிறுவர்கள், நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்கலாக பெருமளவானோர் உணவு, தூய நீர், மருந்துப் பொருட்கள் முதலான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாம் வட, கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நிலையத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசியமான உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

குறிப்பாக, சிறுவர்களுக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும், உதவிகள் சென்றடைய முடியாத பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் தேவையான நிவாரணப் பொருட்களையும், ஏனைய உதவிகளையும் வழங்குவதிலேயே நாம் விசேட கவனம் செலுத்தியிருக்கிறோம்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உணவு மற்றும் தூய குடிநீர், மருந்துப் பொருட்கள், தற்காலிக தங்குமிடம், ஆடைகள் முதலிய உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.

இந்த சவால் மிகுந்த தருணத்தில் உங்களால் வழங்கப்படும் சிறிய உதவியும், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆகவே, https://www.gofundme.com/f/support-flood-relief-efforts-in-north-and-east-sri-lanka என்ற இணையதளத்தினுள் பிரவேசிப்பதன் ஊடாக, நன்கொடை உதவிகளை வழங்குவது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும் என கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This