முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வரப்பிரசாதங்கள் அவசியமா?
முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் தொடர்பிலான காரணிகளை ஆராய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மூலம் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு தமக்கான வரப்பிரசாதங்கள் மற்றும் அவற்றுக்கான தேவை தொடர்பில் எழுத்து மூலம் அறியப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகள் சிலர் தற்போது அது தொடர்பிலான காரணிகளை குறித்த குழுவிடம் சமர்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்கள் தொடர்பில் தற்போது நிலவும் கட்டளைச் சட்டங்களை ஆராய்ந்து அது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மூலம் அண்மையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.டீ.சித்ரசிறி தலைமையில் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு முன்வைக்கும் அறிக்கையை அமைச்சரவையில் முன்னிலைப்படுத்தி வரப்பிரசாதங்கள் தொடர்பில் அவசியமான தீர்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் தொடர்பான சட்டமூலத்தின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வூதியம், உத்தியோகபூர்வ இல்லம், மூன்று வாகனங்களுக்கான எரிபொருள் மற்றும் தனிப்பட்ட செயலாளருக்கான ஊதியம் மட்டுமே வழங்க உரிமையுள்ளது.
எனினும், கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளின் கீழ் பல சலுகைகள் உள்வாங்கப்பட்டு தண்ணீர் கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் கூட அரசாங்க செலவில் செலுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி, ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் ஒவ்வொரு பாதுகாப்புப் பிரிவிற்கும் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புக்காக பொது பாதுகாப்பு அமைச்சகம் அல்லது வேறு ஏதேனும் அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை இந்தக் குழு ஆராயும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த பாதுகாப்பு பிரிவுகளுக்கு வாடகை அடிப்படையில் கட்டிடங்கள் பெறப்பட்டிருந்தால், மாதாந்திர வாடகை மற்றும் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் விசாரிக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக அமைச்சர்கள் குழுவினால் நியமிக்கப்பட்ட குழு இது தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் ஏற்கனவே கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் பராமரிப்புக்காக மட்டும் மூன்று வருடங்களில் (2022 – 2024) செலவிடப்பட்ட தொகை மத்திய வங்கி பதிவுகளின் படி 27 கோடி ரூபாய் ஆகும்.
மேலும், இந்த முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை கடந்த காலத்தில் 45 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.