கடந்த கால அரசுகளைப்போன்று அநுரவும் ஏமாற்றக்கூடாது
சிவராம் படுகொலை மட்டுமல்ல வடக்கில் ஊடகத்துறை சார்ந்து நடந்த படுகொலைகள், கடத்தல்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். குறிப்பாக உதயன் பத்திரிகை மீதான சம்பவங்கள் தொடர்பிலும் ஒட்டுக்குழுவொன்றால் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலை தொடர்பிலும் விரைவாக விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார்.
சனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பு என்ற பெயரில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சையாக மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.சரவணபவனின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை நடைபெற்றபோதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கொழும்பில் 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சிவராமின் விசாரணைகள் மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. இது எப்போதோ நடந்து முடிந்திருக்கவேண்டியது. அப்போதைய ஆட்சியாளர்களுடன் இயங்கிய ஒட்டுக்குழு ஒன்றின் மீது இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
சிவராம் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒட்டுக்குழுவின் தலைவராகவும் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஒருவரினுடையது என்ற சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கடந்த கால அரசாங்கங்கள் ஒட்டுக்குழுக்களை பாதுகாப்பதற்காக இந்த விசாரணைகளை கிடப்பில் போட்டிருந்தன.
அநுர அரசாங்கம் இதை மீண்டும் விசாரிக்க கையில் எடுத்தமை வரவேற்புக்குரியது. துணிச்சலான முடிவு. ஆனால், முன்னைய அரசாங்கங்களைப்போன்று பெரும் படம் காட்டி ஆரம்பித்துவிட்டு பின்னர் சப்பென்று அதைக் கைவிடக்கூடாது.
அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வந்தபோது உதயன் பணிமனைக்கும் வந்திருந்தார். நான் அவரை சந்தித்தேன். உதயன் பத்திரிகை மீது இதுவரை 39 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்குக்கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதிலும் குறிப்பாக உலகிலேயே முதல் தடவையாக ஊடக நிறுவனம் ஒன்றுக்குள் புகுந்து பணியாளர்களை சுட்டுக்கொலை செய்த சம்பவம் அரங்கேறியதும் உதயனில்தான். அதையும் அநுரவுக்கு சுட்டிக்காட்டியிருந்தேன். அந்தச் சம்பவத்துடன் அப்போதைய ஆட்சியில் அமைச்சராக இருந்தவரின் ஒட்டுக்குழு தொடர்புபட்டதாக பலர் பொதுவெளியில் கூறியிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பிலும் உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
ஒட்டுக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் இன்று வேசங்களைப் போடுகின்றார்கள். அவர்களின் உண்மை முகத்தை தமிழ் மக்கள் அறிவதற்கு இது நல்ல வாய்ப்பாக அமையும்.
உதயன் மீதான சம்பவங்களைத்தாண்டி வடக்கு மற்றும் கிழக்கில் பல தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். தாக்குதலுக்கு உள்ளாகினார்கள். இவை தொடர்பிலும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் – என்றார்.