பாலஸ்தீனிய பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல்; 15 பேர் உயிரிழப்பு..!

பாலஸ்தீனிய பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல்; 15 பேர் உயிரிழப்பு..!

மத்திய காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்குப் புகலிடம் அளிக்கப் பயன்படுத்தப்படும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸாவில் ஹமாஸ் நடத்தும் குடிமைத் தற்காப்பு முகவர் நிலையத்தின், நுசிராத் முகாமில் உள்ள தளம் நேற்றையதினம்(13) இஸ்ரேலின் பீரங்கிகளின் சரமாரி தாக்குதலுக்கு உள்ளானது.

இதனால், 15 பேர் உயிரிழந்தும் பலர் பலத்த காயங்களுக்கும் உள்ளாகினர்.

முன்னதாக, வடக்கு காசாவில் தெரு முனையில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான அறிக்கைகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவ‍ேளை, வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ தளத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் நான்கு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

டெல் அவிவ் மற்றும் ஹைஃபா இடையே அமைந்துள்ள பகுதியில் உள்ள இஸ்ரேலிய தற்காப்புப் படைகளின் கோலானி படைப்பிரிவின் பயிற்சி முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஹெஸ்பொல்லா கூறி பொறுப்பேற்றுள்ளது.

கடந்த வியாழன் அன்று தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆயுதக் குழுவின் ஊடக அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

CATEGORIES
Share This