20 பேருக்கு தேர்தலில் ஈடுபாடு இல்லை!: முன்னாள் ஜனாதிபதிகள் மூவரும் உள்ளடக்கம்

20 பேருக்கு தேர்தலில் ஈடுபாடு இல்லை!: முன்னாள் ஜனாதிபதிகள் மூவரும் உள்ளடக்கம்

முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 20 பேர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமலிருக்க தீர்மானித்துள்ளனர்.

அவர்களுள் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரபால சிறிசேன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறு தீர்மானித்தவர்களுள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் கிரிஎல்ல, ஷான் விஜயலால் த சில்வா, விமல் வீரவங்ச, பந்துல குணவர்தன, விஜயதாஸ ராஜபக்ச, விமல வீர திஸாநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், டப்ள்யூ டீ ஜே செனவிரத்ன, காமினீ லொகுகே, மகிந்த யாப்பா அபேவர்தன, சீ.வீ. விக்னேஷ்வரன், வாசுதேவ நாணயக்கார, கெவிந்து குமாரதுங்க, ஷெஹான் சேமசிங்க, எஸ் பீ. திஸாநாயக்க, கனக ஹேரத் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன் செயற்பட்ட கரு ஜயசூரிய, லக்ஷமன் யாப்பா அபேவர்தன, அகில விராஜ் காரியவசம், ரஞ்சித் அலுவிகாரே, நவீன் திஸாநாயக்க ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தீர்மானித்துள்ளனர்.

நிதி நெருக்கடி காரணமாக தாம் இம்முறை போட்டியிடவில்லை என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, தாம் கட்சியாகவோ, கூட்டணியாகவோ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என உறுதிப்படுத்தியிருந்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் படித்த மற்றும் இளைஞர் சமுதாயத்திற்கு வாய்ப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வீ. விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுள் பல புதிய முகங்களை காணக்கூடியதாக இருக்கும் என அரசியல் அவதானிகள் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This