தெற்கில் ஏற்பட்ட மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றம் அல்ல; ‘சங்கு’ சின்னம் வெல்லும் என்கிறார் சுரேன் 

தெற்கில் ஏற்பட்ட மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றம் அல்ல; ‘சங்கு’ சின்னம் வெல்லும் என்கிறார் சுரேன் 

தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற மக்களின் திரட்சியாக சங்குச் சின்னம் பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான ஆசனத்தை பெற்று வெற்றி பெறும் என ரெலோ அமைப்பின் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சுரேன் குருசுவாமி தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்தில் தமிழ் தேசியத்தின் திரட்சிக்காக பொது வேட்பாளர் களம் இறக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அவருக்கு அமோக ஆதரவை வழங்கினார்கள்.

அந்த ஆதரவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் சங்கு சின்னத்தில் களமிறங்கியுள்ளோம்.

ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றம் கிடையாது. அதனை அரசாங்கம் ஜெனிவா தொடர்பில் வெளியிட்ட கருத்து தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

ஜெனிவா தீர்மானத்தை முற்றாக நிராகரிக்கிறோம் உள்நாட்டு பொறிமுறை மூலமே பிரச்சனைகளுக்கான தீர்வு என இலங்கை அரசாங்கம்,தெரிவித்திருக்கின்ற நிலையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு சிதறடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் தமிழருக்கு ஏதாவது செய்யும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்திருக்கும் நிலையில்,அவர்களின் நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை வழங்கியுள்ளதுடன் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் பால் பயணிக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து சங்குச் சின்னத்தில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி எமது பலத்தை காட்டியுள்ளோம்.

அடுத்து பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, ஓரணியில் பயணிக்கின்ற தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் களமிறங்கி உள்ளன.

சங்குச் சின்னம் தமிழ் தேசிய உணர்வுடன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பயணிக்கும் சின்னமாக காணப்படுகின்ற நிலையில் சங்குச் சின்னத்தை அமோக வெற்றி பெறச் செய்வதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தை தொடர முடியும் என அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This