அரசியல் – பொருளாதார நோக்கில் அநுரவை வரவேற்கும் சர்வதேசம்: சீனாவுடனான தொடர்பு நிறுத்தப்படுமா?

அரசியல் – பொருளாதார நோக்கில் அநுரவை வரவேற்கும் சர்வதேசம்: சீனாவுடனான தொடர்பு நிறுத்தப்படுமா?

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சர்வதேச நாடுகள் பலவற்றில் இருந்தும் அரசியல் – பொருளாதார நோக்கில் வாழ்த்துக்கள் நிரம்பிய வண்ணம் உள்ளன.

56 இலட்சம் மக்கள் ஆணையால் ஜனாதிபதியாக பதவியேற்கப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிர்ப்பாராத அளவில் கடன் வழங்கும் பல ஆசிய வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தற்போது ஆதரவு தெரவித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாடுகளுடன் இராஜதந்திர உறவை பேணக் கூடியவர், தற்போது ஜனாதிபதியாக பதவி வகித்துள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இந்த இராஜதந்திரம் என்பது புதிது என்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்தாகவும் அமைந்திருந்தது.

எனினும் அண்மையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், இலங்கையில் அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்தியமைக்காக இலங்கை மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.

1966ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை சுட்டிக்காட்டிய அசகாவா, பல ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களிலும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலும் ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியான பங்காளியாக இருந்து வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவமானது இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வலுவாக முன்னோக்கி கொண்டு செல்ல உதவும் எனவும் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வேலைத்திட்டத்தை புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நிறைவேற்ற முடியும் எனவும் வாழ்த்துச் செய்தி கூறுகின்றது.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி செப்டெம்பர் மாதம் வெளியிட்டுள்ள அதன் சமீபத்திய இதழில், 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கைப் பொருளாதாரம் எதிர்பார்ப்புகளை விஞ்சியதாகக் குறிப்பிட்டுள்ளதுடன் இறுதி காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் வெளிப்படுத்தப்படும் என எடுத்துக்காட்டியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 5.3% அதிகரித்துள்ளது.குறைந்த அடிப்படை விளைவில் தொழில்துறை எதிர்பார்த்ததை விட வேகமாக 11.8% விரிவடைந்தது, பணவீக்கத்தைக் குறைத்தல் மற்றும் மூலப்பொருட்களின் சிறந்த விநியோகம், சேவைகள் 2.6% இல் மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்தன மற்றும் விவசாயம் 1.1% என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலீடுகளில் 17.6% விரிவாக்கத்தால் வளர்ச்சி உந்தப்பட்டது, அதேசமயம் நுகர்வு வளர்ச்சியானது வலுவான நிதி சிக்கன நடவடிக்கைகளின் கீழ் 0.5% இல் முடக்கப்பட்டது, மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் வருமான வரிகளின் உயர்வு உட்பட இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் சிறந்த அந்நிய செலாவணி பணப்புழக்கத்தின் கீழ் மீண்டு வந்தாலும், நிகர ஏற்றுமதிகள் தொடர்ந்து வளர்ச்சிக்கு சாதகமான பங்களிப்பை அளித்தன.

முன்னணி குறிகாட்டிகள் 2024 மற்றும் அதற்குப் பிறகு முதல் பாதியில் வலுவான மீட்சியைக் குறிக்கின்றன.

பணவியல் கொள்கையை தளர்த்துவது, சிறந்த பொது நிதி மேலாண்மை மற்றும் வெளிநாட்டுக் கடனை மறுகட்டமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றின் காரணமாக முன்னோக்கி பார்க்கும் குறிகாட்டிகள் நிலையான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.

தொழில்துறை உற்பத்தியின் குறியீடு 7.3% ஆகவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 8.4% ஆகவும் உயர்ந்தது.” என குறித்த இதழ் சுட்டிக்காட்டுகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் சீனாவுக்குமான தொடர்பானது நெருக்கமானதாக காணப்படும் நிலையில் ஆசிய நாடுகளுடனான தொடர்பை வலுவூட்டும் விதத்தில் இவ்வாறான விடயங்கள் வெளியாகி வருகின்றன.

எவ்வாறாயினும், இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கத்தின் சர்வதேச கொள்கைகள் என்னவென்பது தொடர்பில் வெளிப்படுத்தும் முன்னரே, இந்தியாவிலிருந்து தென்னிலங்கை மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கையில் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டமை தொடர்பில் குழம்பியுள்ளமையே இந்தியாவின் உண்மை நிலை என இலங்கையின் முதற்தர ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்த செய்தியும் அதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

விசேடமாக அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆசிய பொருளாதாரத்தின் முன்னோடியான சீனா மீது ஈர்ப்பாக உள்ளமையை நிறுத்தும் நோக்கில், இவ்வாறான ஆதரவுத் தளங்களை ஏற்படுத்தி வருவதாக அரசியல் – பொருளாதார அவதானிகள் கருதுகின்றனர்.

CATEGORIES
Share This