இலங்கையில் கைதாகும் தமிழக மீனவர்கள்: துணை தூதரகம் முன்பு போராட்டத்திற்கு தயார்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதைக் கண்டித்து, ஒக்டோபர் 8 ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தவுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கடந்த ஜூன் 16 ஆம் திகதி முதல் இன்று வரையிலான மூன்று மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 404 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி 54 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்தமாக தமிழக மீனவர்களின் 192 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இன்றைய நிலையில் இலங்கை சிறைகளில் 162 தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்.
இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி ஒக்டோபர் 8 ஆம் திகதி சென்னையில் பா.ம.க சார்பில் இலங்கை துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.