தமிழரசுக் கட்சியாக வீட்டு சின்னத்தில் போட்டி
இலங்கை தமிழரசுக் கட்சியாக கட்சியின் சின்னத்திலேயே பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும், வேட்பாளர்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கட்சியின் வேட்பு மனு தொடர்பான குழு தீர்மானங்களை எடுக்கும் என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் வேட்பு மனு தொடர்பில் 11 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் தினங்களில் அக்குழு கூடி வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
பொதுத் தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும் கற்றவர்களை இணைக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தீர்மானங்கள் எடுத்து அவர்கள் யார் என்பது தொடர்பில் நாங்கள் அறிவிப்போம்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரில் எமது சின்னத்தில் போட்டியிடவே தீர்மானித்துள்ளோம். நாங்கள் அழைப்பு விடுப்பவர்கள் விரும்பினால் எங்களுடன் இணைந்து போட்டியிட முடியும். வடக்கு, கிழக்கிற்கு வெளியிலும் போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்போம்.
இதேவேளை தேர்தலின் பின்னர் யார் ஆட்சியமைக்கப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. அவ்வாறு ஆட்சியமைப்பவர்களுடன் நாங்கள் கலந்துரையாடுவோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைத்தால் அவர்களுடன் கலந்துரையாடி தேவையான உதவிகளை வழங்குவோம். தேர்தலின் பின்னரே நாங்கள் இந்த விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்போம் என்றார்.