லெபனானில் 150 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் தகர்ப்பு; இஸ்ரேல் அறிவிப்பு

லெபனானில் 150 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் தகர்ப்பு; இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி ஓராண்டை நெருங்கி வரும் சூழலில், இஸ்ரேலும் தொடர்ந்து காசாவை இலக்காக கொண்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து உள்ளனர்.

இந்த சூழலில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது.லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு தாக்குதலை தொடுத்து வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் அந்த அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர், ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக் கொல்லப்பட்டனர்.ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது.

இந்த சூழலில், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடுத்து உள்ளது. இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு 200-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஈரானிய அரசு வீசி தாக்குதல் நடத்தியது. எனினும், அவற்றில் பல ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து, அழித்து விட்டோம் என இஸ்ரேல் கூறியது.இந்த சூழலில், லெபனான் நாட்டில் உள்ள 28 கிராமங்களை சேர்ந்த மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் படை கூறியுள்ளது. அந்நாட்டிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதலை தொடுத்து வருகிறது.

வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.இதுபற்றி, இஸ்ரேல் விமான படை வெளியிட்டு உள்ள செய்தியில், கமாண்டோ படைகள், துணை ராணுவ படையினர் மற்றும் கவச பிரிவுகள், விமானம் மற்றும் போர் விமானங்கள் ஆகியவை தொடர்ந்து தெற்கு லெபனானின் பல்வேறு பகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறது.இதில், வெடிபொருட்கள் மற்றும் நெருங்கிய அளவிலான தாக்குதல்களை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். பயங்கரவாத உட்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டு வருகின்றன என அதுபற்றி விமான படை வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

இதுவரை வான்வெளி தாக்குதல்களில் 150 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டு உள்ளன. இதில், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய மையங்கள், ஆயுத சேமிப்பு பகுதிகள் மற்றும் ராக்கெட் ஏவும் தளங்கள் ஆகியவை அழிக்கப்பட்டு விட்டன என தெரிவித்து உள்ளது.”

CATEGORIES
Share This