“அரசியலுக்கு குட்பாய்“; நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை

“அரசியலுக்கு குட்பாய்“; நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை

“புதியவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத் தருகின்றேன்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூலில் பதிவை விடுத்துள்ளார்.

அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்குகளுடன் மக்களின் விருப்பத்துக்கமைய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.

அன்று தொடக்கம் இன்று வரை என்னால் முடிந்தளவு தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்திருக்கின்றேன்.

அத்துடன் எனது பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையும் என்னால் இயன்ற வரை வழங்கியும், மக்கள் போராட்டங்களிலும் பங்குபற்றியிருக்கின்றேன்.

வன்னி மாவட்டத்தில் தேவையான என்னால் முடிந்த பல அபிவிருத்தித் திட்டங்களையும் நான் முன்னெடுத்திருக்கின்றேன். தமிழ் மக்கள் எனக்கு இவ்வளவு காலமும் வழங்கிய ஆதரவுக்கும் கௌரவத்துக்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

புதியவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகின்றேன்.

அதேநேரம் தமிழர்களின் உரிமைக்காகத் தொடர்ச்சியாக நான் உழைத்துக் கொண்டிருப்பேன் என்பதையும் உறுதியாகக் கூறுகின்றேன்.” – என்றுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்கத் தீர்மானித்துள்ளதாக ரெலோவின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவுதான் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகியமை.

அதைப்போலவே வடக்கு, கிழக்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றினை எதிர்பார்த்து நிற்கின்றனர். அது புதியவர்களையும், இளையோரையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதாகும்.

மக்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கும் இந்த மன மாற்றத்துக்கு நாம் தடையாக இருக்க முடியாது. அதற்கு வழிவிட வேண்டியது தவிர்க்க முடியாததாகும்.

மக்கள் மனங்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, ஏற்றுக்கொண்டு இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதே அரசியல் கட்சிகளினதும், தலைவர்களினதும் தலையாய கடமையாக இருக்கவேண்டும்.

என்னுடையதும் ஏனைய சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களதும் போட்டியிடாதிருக்கின்ற முடிவு ஏனையவர்களும் உணர்ந்து முடிவெடுக்க உந்துதலாக அமையும் எனக் கருதுகின்றேன்.

வன்னி மாவட்டத்தில் அரசியல் தெளிவுள்ள, ஆளுமைமிக்க இளம் தலைவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற மக்களின், இளைஞர்களின் விருப்பங்கள் நிறைவேற மக்கள் மனதறிந்து எதிர்வரும் நாடாளுமன்றத் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளேன்.” – என்றுள்ளது.

CATEGORIES
Share This