அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை: அரசு கோப்புகளில் கையெழுத்திட அனுமதி இல்லை

அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை: அரசு கோப்புகளில் கையெழுத்திட அனுமதி இல்லை

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இன்று பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினரால் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை எதிர்கொண்டு வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

கடந்த மார்ச் 21ம் திகதி அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகளால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்ற காவலில் திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார்.

அமலாக்கத்துறையை தொடர்ந்து சிபிஐ கடந்த ஜூன் 26ம் திகதி அவரை கைது செய்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிணை கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12ம் திகதி உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.

ஆனால் சிபிஐ வழக்கு விசாரணை நிலுவையில் இருந்ததால் திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவாலில் வெளிவர முடியவில்லை. சிபிஐ வழக்கில் தனக்கு பிணை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

கெஜ்ரிவால் இவ்வழக்கின் விசாரணை செப்டம்பர் 5ம் திகதி நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த் , உஜ்ஜல் புயான் அமர்வு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கி தீர்ப்பளித்தது.

ஜாமீனில் விடுதலை பெற்ற போதிலும் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சர் அலுவலகம் மற்றும் டெல்லி தலைமைச் செயலகத்திற்குச் செல்லக்கூடாது, டெல்லி துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுடன் அல்லது அதிகாரப்பூர்வ அரசு கோப்புகளில் கையெழுத்திட அனுமதி இல்லை ,டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கு மற்றும் வழக்கின் விசாரணை அல்லது நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது,

அதேபோல், வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை சந்திக்கவும் அல்லது அவர்களுடன் உரையாடவோ அனுமதி இல்லை. விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நீதிமன்றத்தால் விலக்கு அளிக்கப்படவில்லை என்றால் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும், பிணைத் தொகையாக 10 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வினால் தற்போது வழங்கப்பட்டுள்ள பிணை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வினால் நீட்டிக்கப் படலாம் அல்லது திரும்பப் பெறப்படலாம், உள்ளிட்ட நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

CATEGORIES
Share This