”ட்ரம்ப் அமெரிக்காவை சீனாவுக்கு விற்றுவிட்டார்”: நேரடி விவாதத்தில் கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு

”ட்ரம்ப் அமெரிக்காவை சீனாவுக்கு விற்றுவிட்டார்”: நேரடி விவாதத்தில் கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு

அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இதில் ஜனநாயகக் கட்சி சார்பாக தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி சார்பாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க நேரப்படி, இரவு 9 மணிக்கு, பிலடெல்பியாவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேரடி விவாதத்தில் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் கலந்துகொண்டனர்.

இந்த நேரடி விவாதத்தில் கருக்கலைப்பு, பொருளாதாரம், குடியேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.

பொருளாதாரம் குறித்த கேள்விக்கு கமலா ஹாரிஸ் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

“டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்கால தவறுகளை சரி செய்வதற்கே நான்கு வருடங்கள் தேவைப்பட்டன. நான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவள். அதனால் உழைப்பவர்களை உயர்த்துவதற்காக முயற்சி எடுப்பேன். அதையே எனது இலட்சியமாக கொண்டுள்ளேன்.

ட்ரம்பின் ஆட்சியின்போது பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் இரண்டும் மிகவும் மோசமாக இருந்து.

இவரின் தவறான கொள்கைகளினால் சீன இராணுவம் பலமடைந்தது.

ட்ரம்ப் அமெரிக்காவை சீனாவுக்கு விற்றுவிட்டார்.

பின் ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தபோது ட்ரம்ப் பொருளாதார நிலையை அப்படியே விட்டுச் சென்றார்.

மேலும் ட்ரம்ப் மிகவும் மோசமான ஒரு சுகாதாரத்தை விட்டுச் சென்றார்” என்றார்.

தொடர்ந்து கமலா ஹாரிஸை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார் ட்ரம்ப், “கமலா ஹாரிஸ் மற்றும் அவரது தந்தை ஒரு மார்க்சிச வாதி” என்றார்.

இதற்கு தலையசைத்து சிரித்தபடியிருந்தார் கமலா ஹாரிஸ்.

கருக்கலைப்பு தொடர்பில் கமலா ஹாரிஸ் பேசியபோது, “ட்ரம்ப் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால், கருக்கலைப்பு தடையை அமுல்படுத்துவார்” என்றார்.

அதற்கு ட்ரம்ப், “கமலா ஹாரிஸ் பொய் கூறுகிறார்” என்றார்.

குடியேற்றம் தொடர்பில் விவாதித்த கமலா ஹாரிஸ், “குடியேற்றம் தொடர்பாக ட்ரம்ப் அதிகம் பேசுவார். ட்ரம்பின் பேரணிக்கு மக்களை அழைக்கிறேன். அந்தப் பேரணியில் சுவாரஷ்யமான விடயங்கள் இருக்கும்.

ஆனால், டொனால்ட் ட்ரம்ப் பேசத் தொடங்கினால் மக்கள் அவர்களது பேரணியிலிருந்து விலகிவிடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சலிப்பு தட்டிவிடும்” என்றார்.

அதற்கு பதிலளித்த ட்ரம்ப், “கமலா ஹாரிஸின் பேரணிக்கு யாரும் வர மாட்டார்கள்” என்றார்.

CATEGORIES
Share This