காசாவில் 4.6 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி
துபாய்இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உணவு மற்றும் சுகாதார வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் காசா பகுதியில் உள்ள 6 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது.
அதைத்தொடந்து 150 மையங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களால் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. காசா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. உலக சுகாதார அமைப்பு , யுனிசெப் மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் ஆகியவற்றுடன் சேர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதற்கு தேவையான நிதியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கி உள்ளது.போலியோ தொற்றுநோய் பகுதியாக காசா கடந்த ஜுலை மாதம் அறிவிக்கப்பட்டது.தொடந்து நடைபெற்று வரும் போர் தான் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவை தடுப்பூசி போடுவதற்கு வசதியாக மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு இரு தரப்பையும் கேட்டுக்கொண்டன.
இதை ஏற்பதாக பாலஸ்தீனிய இயக்கமான ஹமாஸ் கூறியது. அதைத்தொடர்ந்து மருத்துவப் பணியாளர்கள் செல்ல நடைபாதையைத் திறப்பதாகவும், தடுப்பூசிகளை வழங்குவதற்கு பாதுகாப்பான பகுதிகளை ஏற்படுத்துவதாகவும் இஸ்ரேல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.