“13” பிளஸ் என்றால் என்ன?: சிங்கள மக்களுக்கு சஜித் தெளிவுபடுத்த வேண்டும்
13 பிளஸ் தொடர்பாக தமிழரசு கட்சியும் சஜித் பிரேமதாசவும் தமிழ், சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இனப் பிரச்சினைக்கான தீர்வாக 13 பிளஸ் ஐ தருவதாக எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்திருப்பதாக கடந்த திங்கட்கிழமை முல்லைத்தீவில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தில் அவரின் முன்பாக தமிழரசு கட்சி பிரதிநிதி ஒருவர் கூறினார்.
இதனை அதே மேடையில் இருந்த சஜித் பிரேமதாசவும் நிராகரிக்கவில்லை. நான் ஒரு தமிழன் என்ற வகையில் இதனை வரவேற்கின்றேன்.
ஆனால், சஜித் பிரேமதச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை குறிப்பிடவில்லை. ஆகவே, சஜித் பிரேமதச தமிழரசு கட்சியுடன் செய்துகொண்டுள்ள ஒரு இரகசிய உடன்படிக்கையின் பிரகாரமாகவே இந்த உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டிருந்திருக்கலாம்.
ஆனால், 13 பிளஸ் என்பது எல்லையற்றது. ஆகவே, இந்த பிளஸ் தமிழீழம் வரையா அல்லது சமஷ்டி வரையா என்ற அதன் எல்லையற்ற தன்மையை சஜித் பிரேமதாச தெளிவுபடுத்த வேண்டும். சிங்கள மக்களுக்கு முன்பாக அவர் மேடையில் இதனை குறிப்பிடவேண்டும்.
அவ்வாறு அவர் இதனை சிங்கள மக்களுக்கு முன்பாக உறுதிப்படுத்துமிடத்து தமிழ் மக்களின் நன்மை கருதி நானும் சஜித் பிரேமதச அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.” என்றார்.