தமிழரசின் தலைவராக தெரிவாகியிருந்த சிறிதரன்தான் முடிவெடுக்க வேண்டும்
தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியது தமிழ் பொது வேட்பாளரின் வாக்கில் தாக்கம் செலுத்தாதென தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ‘நமக்காக நாம்’ தேர்தல் பிரசார நடவடிக்கை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸாவுக்கு தமிழரசுக் கட்சி முழுமையாக ஆதரவு வழங்கியது போன்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அக்கட்சியின் எம்.பி. சிறிதரன் லண்டனில் இருந்தவாறு தமிழ்த் தேசியத்தின் பக்கமே நிற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர்தான் அவர்களுடைய கடந்த மாநாட்டில் தலைவராக தெரிவு செய்யப்பட்டவர். எனவே அவர் வந்துதான் இதற்கான ஒரு முடிவினை எடுக்க வேண்டும். அது தமிழரசுக் கட்சியினுடைய உள்வீட்டு பிரச்சினை. அதில் நாங்கள் பெரிதாக பேச முடியாது.
இருந்தாலும் தமிழ்த் தேசிய பொது கட்டமைப்புடன் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பமாக இருந்தது. அது நடைபெறவில்லை. ஆனாலும் தற்போது பல கட்சிகள் ஒன்றாக நிற்கின்றன.
தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியது பொது வேட்பாளரின் வாக்கில் தாக்கம் செலுத்தும் என நான் பெரிதாக நம்பவில்லை. ஏனெனில் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கின்றார்கள். அவர்கள் அதன்படியே வாக்களிப்பார்கள். ஆனால் ஒரு சிறு தாக்கம் ஏற்படலாம். அது வேறு. ஆனால் நிச்சயமாக ஒரு பெரிய அளவில் வாக்கில் சரிவு ஏற்படும் என நான் கருதவில்லை என்றார்.