ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல்!
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கடந்த 2ஆம் திகதி கொழும்பு நீதவான் அலுவலகத்தில் மிகவும் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கண்டி பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், அந்த அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் நீதவானிடம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ள நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து ஆஜர்படுத்துமாறும் அறிவித்துள்ளார்.