வெற்றியை நோக்கி நகர்கிறாரா அனுர?: ரணில் – சஜித்தை ஒன்றிணைக்க மீண்டும் முயற்சி

வெற்றியை நோக்கி நகர்கிறாரா அனுர?: ரணில் – சஜித்தை ஒன்றிணைக்க மீண்டும் முயற்சி

இலங்கையில் இதுவரை எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் இல்லாத வகையில் இம்முறை வெற்றிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் சாதாரண கட்சியாக இருந்த ஜே.வி.பியால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி இம்முறை அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியால் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க பிரதான வேட்பாளர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ளதுடன், சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான நபராகவும் மாறியுள்ளது.

அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் கருத்துக் கணிப்புகளில் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பகின்றன.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இடையில்தான் போட்டி நிலவுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்த இருவரை தாண்டி முன்னோக்கி நகரும் பல்வேறு பிரச்சார உத்திகளை கையாண்டு வருகிறார்.

இந்த நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட தருணத்தில் இருந்ததையும் விட தற்போது தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு நாடு முழுவதும் பரவலாக அதிகரித்துள்ளதாகவும் வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களில் மாத்திரமே சஜித் மற்றும் ரணிலுக்கான ஆதரவு இருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ரணில் – சஜித்தை ஒன்றிணைக்கும் முயற்சிகளும் இடம்பெறுவதாக தெரியவருகிறது. இருதரப்புகளையும் சேர்ந்தவர்கள் ரணில், சஜித் இணைந்தால் இலகுவாக அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என இருவருக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி கொண்டுசெல்லும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தென்னிலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியால் பாரம்பரிய அரசியல் கட்சிகள் கடுமையான நெருங்கடியை சந்தித்துள்ளதாகவும் இம்முறை வெற்றியை உறுதியாக கணிக்க முடியாதுள்ளதால் பல மாற்றங்கள் இலங்கை அரசியலில் அடுத்துவரும் வாரங்களில் ஏற்படும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
Share This