ரஷ்ய உளவு திமிங்கலம் உயிரிழப்பு: நோர்வே கடற்கரையில் உடல் மீட்பு!
ரஷ்யாவால் உளவாளியாக பயிற்சி அளிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெலுகா திமிங்கலம் நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹவால்டிமிர் என்ற புனைப்பெயர் கொண்ட இந்த திமிங்கலம் முதல் முறையாக 2019ஆம் ஆண்டு நோர்வேயின் கரைக்கு அப்பால் கண்டறியப்பட்டது.
இதன்போது, அதில் விசித்திரமான இருக்கை பொருத்தப்பட்டிருந்தது.
அதில் “Equipment St. Petersburg”, அதாவது செயின்ட் பீடர்ஸ்பர்க் கருவி என்றும் எழுதப்பட்டிருந்தது.
அந்தத் திமிங்கிலம் தப்பியிருக்கலாம் என்றும் அதற்கு ரஷ்யக் கடற்படை பயிற்சி அளித்திருக்கலாம் என்றும் நோர்வே அதிகாரிகள் கூறினர்.
எனினும், ரஷ்யா அதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் திமிங்கிலம் வார இறுதியில் உயிரிழந்த நிலையில், மரைன் மைண்ட் என்ற அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்டது.
மரைன் மைண்ட் நிறுவனர் செபாஸ்டியன் ஸ்ட்ராண்ட் AFP செய்தி நிறுவனத்திடம், இறப்புக்கான காரணம் தெரியவில்லை என்றும் ஹவால்டிமிரின் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.
பெலுகா இனத் திமிங்கலத்தின் சராசரி ஆயுட்காலம் 60 வயதாகும். எனினும் ஹ்வால்டிமிரின் வயது சுமார் 15 எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.