புதிய ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைந்தால் 66 நாட்களுக்குள் தேர்தல்

புதிய ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைந்தால் 66 நாட்களுக்குள் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் புதிய ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இவ்வாறு கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் ஜனாதிபதி, ஆட்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான அமைச்சரவையை நியமிப்பதற்குத் தமக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள் போதுமானதாக இல்லை என நினைத்தால், பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால் ஆறு முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்புமனுக்கள் கோரப்பட்டு 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும். உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் நடத்த வேண்டும். புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய தொகையை விட அதிகமாகச் செலவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் கண்டறியப்பட்டால், அவருடைய பதவியையும் அடிப்படை உரிமைகளையும் மூன்று ஆண்டுகளுக்கு இழக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு வர்த்தமானி இலக்கம் 03 ஊடாக இவ்விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் 31 நாட்களுக்குள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகள் வழங்கப்பட வேண்டும். அதை வழங்கத் தவறிய மற்றும் தவறான தகவலை வழங்குதல் ஆகிய இரண்டும் தண்டனைக்குரிய குற்றங்களாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பதவியும் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட சம்பவங்கள் வரலாற்றில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டு புதிய சட்டத்தின் மூலம் இது சட்டமாகிவிட்டதால், தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு விவரங்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் அளிக்க வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கும் செலவுகள் குறித்த விபரங்கள் நாளிதழ் விளம்பரங்கள் மற்றும் இணையதளங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படுமெனவும் தெரிவித்தார்.

செலவு விவரங்கள் முரண்பாடாகவோ அல்லது தவறான தகவல்களாகவோ இருந்தால், மக்கள் எந்த நேரத்திலும் பொலிஸில் முறைப்பாடு அளிக்கவும் நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்லவும் சட்டப்படி அனுமதி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This