இராணுவ வீரர்களின் தியாகத்தில் ட்ரம்ப் அரசியல் நடத்துகின்றாா்!
”இராணுவ வீரா்களின் தியாகத்திலும் டொனால்ட் ட்ரம்ப் அரசியல் நடத்துகின்றாா்” என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு ட்ரம்ப் அஞ்சலி செலுத்திய போது அவரது ஆதரவாளர்கள் நினைவிடத்தில் இருந்த ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பாக கமலா ஹாரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது’
‘இராணுவ வீரா்களின் நினைவிடத்தை ட்ரம்ப் அவமதித்துவிட்டாா்.
தனது அரசியல் நாடகத்தை அனைத்து இடங்களிலும் அவா் நடத்தி வருகிறாா். வீரா்களுக்கான நினைவிடத்தை தோ்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்று மாகாண அரசு தடை விதித்தும்இ ட்ரம்ப் அதை மதிக்கவில்லை. அமெரிக்க ராணுவ வீரா்களின் தியாகத்திலும் அரசியல் நடத்துகிறாா்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் ‘ ‘உயிரிழந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினா். எனவேதான் புகைப்படம் எடுக்கப்பட்டது. நான் ஏற்கெனவே மக்கள் மத்தியில் பிரபலமாகவே இருக்கிறேன். எனவே, அஞ்சலி செலுத்தும் இடத்தில் அரசியல் ஆதாயம் தேடும் தேவை எனக்கு இல்லை’இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்பும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.