காஸா குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து; 3 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்

காஸா குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து; 3 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது. இப்போரில் இதுவரையில் 40ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இப் போரை நிறுத்தும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வந்தாலும் இஸ்ரேல் அதனைக் கண்டுகொள்வதாக இல்லை.

இப் போரின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.

முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகள் சரி வர கிடைக்காததால் அவதிப்பட்டு வருவதோடு, சுகாதார வசதிகளும் இல்லாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் காஸாவில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முகாமில் தங்கியிருக்கும் ஒரு குழந்தைக்கு போலியோ நோய் தாக்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organization – WHO) தெரிவித்துள்ளது.

இந்நோய் ஏனைய குழந்தைகளுக்கும் பரவாமல் இருக்க முதல் கட்டமாக மத்திய காஸா முகாம்களில் தங்கியிருக்கும் 10 வயதுக்குட்பட்ட 6 இலட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிமுதல் மதியம் 3 மணி வரையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

இதன் காரணமாக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு காஸாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

தேவையேற்படின் கூடுதலாக ஒரு நாளை ஒதுக்கவும் இஸ்ரேல் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This