கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: வெளியான தொலைபேசி உரையாடல் பதிவு
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பல தரப்பினரும் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
இவ்வாறிருக்க சம்பவத்தன்று, உயிரிழந்த மருத்துவரின் பெற்றோருக்கு மருத்துவமனை நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறிய மூன்று தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியாகியுள்ளன.
அவ்வுரையாடலில், நடைபெற்ற கொலையை தற்கொலை அல்லது உடல்நலக் குறைவினால் மரணம் என மாற்ற முயற்சி செய்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
முதலாவது அழைப்பு 9ஆம் திகதி காலை 10.53க்கு எடுக்கப்பட்டுள்ளது.
1 நிமிடமும் 11 வினாடிகளும் நீடித்த அந்த உரையாடலில், மருத்துவமனை உதவிக் கண்காணிப்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பெண்ணொருவர், மகளுக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு பெண் மருத்துவரின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அடுத்த இரண்டாவது அழைப்பு 46 வினாடிகள் நீடித்துள்ளது. அதில் பெண் மருத்துவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி அழைப்பு 28 வினாடிகள் நீடித்துள்ளன.
அதில் உங்கள் மகள் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கலாம். பொலிஸார், மருத்துவமனை நிர்வாகம் என அனைவரும் இங்கு இருக்கிறோம். எனக் கூறி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிவந்த தகவல்களும் தொலைபேசி உரையாடல்களில் கூறப்பட்ட தகவல்களும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பில் சந்தேகம் எழுப்பிய விசாரணை அதிகாரியொருவர்,
“அழைப்பில் பேசும் பெண், பொலிஸார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் முன்னிலையில் பேசுவது தெரிகிறது.
ஏனென்றால் உயிரிழந்த மருத்துவரின் பெற்றோருக்கு அழைப்பு செல்வதற்கு முன்பே ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என தல்லாஹ் பொலிஸ் நிலைய குறிப்பேட்டில் பதிவேற்றப்பட்டுவிட்டது.
இதனால் குற்றத்தை மறைப்பதற்கு பொலிஸ் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளால் தற்கொலை என சதித் திட்டம் தீட்டப்பட்டதா என கேள்வியெழும்புவதாக” கூறியுள்ளார்.