மெல்லிசை அரசி பி.சுசீலா வைத்தியசாலையில் அனுமதி!

மெல்லிசை அரசி பி.சுசீலா வைத்தியசாலையில் அனுமதி!

பிரபல பின்னணி பாடகி பி சுசீலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 88 வயதுடைய இவர், 67 வருடங்களை இசைக்காகச் செலவிட்டுள்ளார். இளம்வயதிலேயே குறுகியகாலத்திற்குள் பாரம்பரிய இசையில் தேர்ச்சி பெற்றவராக விளங்கிய இவர், ஆரம்பத்தில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாட ஆரம்பித்தார். சுசீலாவின் இசைத் திறமையைக் கண்ட இயக்குநர் கே.எஸ் பிரகாஷ்ராவ் தன்னுடைய பெற்றதாய் திரைப்படத்தில் முதன் முதலாகப் பின்னணிக் குரலாகப் பாட வைத்தார். தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 9 மொழிகளில் பாடல்களைப் பாடி மக்களின் மனதைக் கவர்ந்தவர் பி சுசீலா, 25,000 இற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியா மாத்திரமின்றி இவருக்கு உலகம் முழுவதும் இரசிகர்கள் உள்ளனர். தென்னிந்தியாவின் ‛இசைக்குயில்’, ‘மெல்லிசை அரசி’ என அழைக்கப்படும் பி சுசீலா பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் என்றால் மிகையாகாது. இந்தியாவிலேயே அதிக பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்காக கின்னஸ் புத்தகம் மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்டவற்றில் இவர் இடம் பிடித்துள்ளார்.

CATEGORIES
Share This