தேர்தலில் வாக்களிப்பது எப்படி?; பொதுமக்களின் குழப்பத்தை அதிகப்படுத்தும் தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தலில் வாக்களிப்பது எப்படி?; பொதுமக்களின் குழப்பத்தை அதிகப்படுத்தும் தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பொதுமக்களின் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.

‘எமது வாக்காளர்கள் புள்ளடி இடுவதற்குப் பழகியிருக்கிறார்கள். எனவே வாக்குச்சீட்டில் எவரேனும் புள்ளடி இட்டால், அதனை நாம் ‘1’ எனக் கருதுவோம். அதேபோன்று இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்கு தொடர்பில் மக்கள் மத்தியில் போதியளவு தெளிவில்லை’ என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியிருப்பதாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியுடன் வெளியிடப்பட்டிருக்கும் வரைபடத்தில் விருப்பு வாக்கு அளிப்பதெனில் 1,2,3 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தலாம் எனவும், இல்லாவிடின் முதலாவதாக வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்கு நேராகப் புள்ளடி இட்டு, இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்கை 2,3 என இலக்கமிட்டு அடையாளப்படுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்தியை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன், ‘எமது வாக்கு செல்லுபடியாகவேண்டுமெனில், நாம் சரியாக வாக்களிக்கவேண்டும்.

இருப்பினும் எவ்வாறு வாக்களிக்கவேண்டும் என்பது பற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தவறான தகவல்கள் பகிரப்படுவதானது, இதுகுறித்த குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆங்கில நாளிதழொன்றில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் மேற்கோளுடன் வெளியாகியிருக்கும் வரைபடத்தில் தேர்தலில் வாக்களிப்பது குறித்த தவறான வழிகாட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ஜனாதிபதித்தேர்தல் சட்டத்தின் பிரகாரம் விருப்பு வாக்கு இடுவதெனின் ‘புள்ளடி’ குறியீட்டைப் பயன்படுத்தக்கூடாது. மாறாக 1,2,3 என்ற இலக்கங்களே பயன்படுத்தப்படவேண்டும் என அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வரைபடத்திலும் புள்ளடி மற்றும் இலக்கங்கள் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வாக்களித்தால், அது செல்லுபடியற்ற வாக்காகக் கருதப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றும் அம்பிகா சற்குணநாதன் அவரது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This