இதையெல்லாம் பதக்கம்னு தந்து ஏமாத்துறாங்கப்பா; ஒலிம்பிக் மானத்தை வாங்கினார் அமெரிக்க வீரர்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் தமக்கு வழங்கப்பட்ட வெண்கலப்பதக்கம் தரமானதாக இல்லை என்று குற்றச்சாட்டை கூறி உலகை தடதடக்க வைத்து இருக்கிறார் அமெரிக்க வீரர் நைஜா ஹூஸ்டன்.
பதக்க வேட்டை
பெரும் எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்புகளுக்கு இடையே பாரிசில் தொடங்கிய ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் முடிந்தது . உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொண்ட வீரர்கள் போட்டிகளில் சாதனை படைத்து, பதக்க வேட்டை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் வாகை சூடியவர்களுக்கு அளிக்கப்பட்ட பதக்கங்களில் குறைபாடு இருப்பதாகவும், அவை தரமற்று இருப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டு வெற்றி பெற்ற வீரர்களிடம் இருந்தே எழும்ப ஆரம்பித்து இருக்கின்றன. கடந்த 29ம் தேதி நடந்த ஸ்கேட் போர்டிங் விளையாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த நைஜா ஹூஸ்டன் வெண்கலம் வென்றார்.
அவரின் வெற்றியை அந்நாட்டு மக்கள் கொண்டாடியது ஒரு பக்கம் இருக்கும் நிலையில், தான் வாங்கிய வெண்கல பதக்கத்தின் தரம் எப்படி இருக்கிறது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு கலகலக்க வைத்து இருக்கிறார் ஹூஸ்டன். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது;
பதக்கம் தரமற்று, அதன் பொலிவையும், வண்ணத்தையும் இழந்துவிட்டது. ஒலிம்பிக் பதக்கங்கள் என்றாலே பார்ப்பதற்கே அழகாக, தரமாக இருக்கும். புத்தம் புதியதாக அனைவரையும் கவரும் வண்ணத்தில் காணப்படும்.
ஆனால் இம்முறை அளிக்கப்பட்ட பதக்கத்தில் தரம் குறைவு. கைகளில் வைத்திருந்த போது வியர்வையால் நனைந்து வெண்கலப் பூச்சு உதிர்ந்து, அதன் நிறம் மாற ஆரம்பித்துவிட்டது, நாம் எதிர்பார்க்கும் தரம் இந்த பதக்கத்தில் இல்லை என்று கூறி உள்ளார்.
இவர் மட்டுமல்ல… இந்த ஒலிம்பிக்கில் பிரிட்டனுக்கான முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த நீச்சல் வீராங்கனையுமான ஸ்கார்லெட் மெவ் ஜென்சன் இதே குற்றச்சாட்டை வெளிக்கொணர்ந்து இருக்கிறார். பதக்கம் தரமற்றவையாக இருந்தாலும் அதை பற்றி கவலையில்லை, எப்படி இருந்தாலும் அது ஒரு பதக்கமே என்று தெரிவித்துள்ளார்.
போதிய குளிர்சாதன வசதி இல்லை, வீரர்களின் அறைகளில் உருப்படியான ஏற்பாடுகள் இல்லை என நடப்பு ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர்கள் புகார் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் வேளையில் தற்போது பதக்கத்தின் தரத்திலும் பஞ்சாயத்து கிளம்பி இருப்பது அடுத்தக்கட்ட சர்ச்சைக்கு வழி வகுத்து இருக்கிறது.