ரணிலின் எட்டு இராஜாங்க அமைச்சர்கள்: நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு
ரணில் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் 8 பேர் தமது பதவிகளிலிருந்து விலக தயாராகி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என தீர்மானித்துள்ள இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 8 ஆகும்.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காமல் இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் இருப்பது நல்லது அல்ல என அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும் கடந்த நாட்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் குறித்த இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள இதுவரையில் தீர்மானிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க நேற்று (08) தீர்மானித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தன்னுடைய தனிப்பட்ட காரணத்தினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலில் ஈடுபடும் போது தனிப்பட்ட தீர்மானங்களை முக்கியப்படுத்திக் கொள்ள வேண்டாம் என நாமல் ராஜபக்ச அதன்போது பவித்ரா வன்னியாராச்சியிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.