தமிழ் தேசிய கொள்கையின் குறியீடாக களம் இறங்குகிறேன்

தமிழ் தேசிய கொள்கையின் குறியீடாக களம் இறங்குகிறேன்

தமிழ் தேசியக் கொள்கையின் குறியீடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களம் இறங்குகிறேன் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் பொது வேட்பாளருமான பாக்கிய செல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

தந்தை செல்வா நினைவு அரங்கத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற தமிழ் பொதுக் கட்டமைப்பின் தமிழ் பொது வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அரசியலில் தமிழ் மக்களுக்காக உணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்திற்காக அன்றிலிருந்து இன்று வரை செயற்பட்டு கொண்டிருக்கிறேன். என்னை தமிழ் மக்கள் சார்ந்து ஜனாதிபதி வேட்பாளராக பொதுக் கட்டமைப்பு தெரிவு செய்தமை தமிழ் தேசியத்தின் கொள்கைக்காக எனக்கு வழங்கப்பட்ட குறியீடாகவே பார்க்கிறேன்.

தமிழ் மக்கள் அரசாங்கத்தினால் காலத்திற்கு காலம் ஏமாற்றப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் எனது பெயரும் ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசாவின் பெயரும் இறுதித் தேர்வில் காணப்பட்டன . நானும் தவராசாவும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் முன்பே இருவரில் யார் வந்தாலும் பரவாயில்லை இணைந்து வேலைத்திட்டங்களை செய்வதாக பேசியிருந்தோம்.

நான் ஜனாதிபதி வேட்பாளராக பொருளாதாரத்தை முன்னேற்றவோ அல்லது இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போகிறேன் என்றோ கூறி வாக்கு கேட்க வரவில்லை.
தமிழ் மக்களின் தீர்க்கப்படாத நீண்ட கால இனப் பிரச்சினை மற்றும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு கிடைக்கப் பெறவில்லை என்பதை சர்வதேசத்திற்கும் அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்துவதற்காகவே களமிறங்கியுள்ளேன்.

தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து தமது இருப்புக்களை தக்க வைத்தனர் அதன் பின்னர் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஜனநாயகத்தினை கையில் எடுத்து தலைவர் பிரபாகரன், செல்வநாயகம் சம்பந்தன் போன்றோர் என்ன நோக்கத்திற்காக செயற்பட்டார்களோ அந்த நோக்கத்தில் இருந்து மக்கள் விலகவில்லை என்பதை எடுத்துக்காட்ட வேண்டும்.

ஆகவே நான் தமிழ் தேசியத்தின் குறியீடாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க உள்ள நிலையில் தமிழ் தேசியத்தை நிலை நிறுத்த அனைவருடைய ஆதரவும் வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This