13 மாதங்களில் 9 பெண்கள் கொலை! சிக்காத சீரியல் கில்லர்!சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு, கரும்புத் தோட்டத்தில் வீசப்படும் பெண்கள்

13 மாதங்களில் 9 பெண்கள் கொலை! சிக்காத சீரியல் கில்லர்!சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு, கரும்புத் தோட்டத்தில் வீசப்படும் பெண்கள்

உத்தரப் பிரதேசத்தில் 9 பெண்கள் ஒரே மாதிரியான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் பரேலி பகுதியில், கடந்தாண்டு ஜூன் மாதத்தில், சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு, இறந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல், அப்பகுதியிலிருந்த கரும்புத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜூன் மாதத்திலேயே அடுத்தடுத்து 2 பெண்களும், ஜூலையில் ஒருவரும், ஆகஸ்ட்டில் ஒருவரும், அக்டோபரில் ஒருவரும், நவம்பரில் 2 பெண்களும் ஒரே மாதிரியான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டு, கரும்புத் தோட்டத்தில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டன.

இந்த தொடர் கொலை சம்பவங்களில் 40 முதல் 65 வயதுடையவர்களே கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் எவரும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இதனையடுத்து, 300 காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட 14 குழுக்கள், இந்த சம்பவத்திற்கான விசாரணையில் ஈடுபட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்தாண்டு ஜூன் மாதம் வரையில், தொடர் கொலைகள் சம்பவம் நடக்காமல் இருந்துள்ளது.

இந்த நிலையில், புஜியா ஜாகிர் பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவர், தனது தாய் வீட்டுக்கு ஜூலை 2ஆம் தேதியில் சென்றுள்ளார். ஆனால், சிறிதுநேரத்தில் அனிதா காணாமல் போனதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருந்த கரும்புத் தோட்டத்தில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக, அதேநாளில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், காணாமல் போன அனிதாவும் சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அப்பகுதி மக்களிடம் சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மூவர் மீது சந்தேகமிருப்பதாக சிலர் தெரிவித்தனர். அவர்கள் கூறிய விவரங்களின் அடிப்படையில் குற்றவாளியின் மாதிரி ஓவியம் வரையப்பட்டது.

இதனையடுத்து காவல்துறை கண்காணிப்பாளர் மனுஷ் பரீக் கூறியதாவது, “இந்த தொடர் கொலைகள் வழக்கில் பல குழுக்கள் பணியாற்றி வருகின்றன; ரோந்துப் பணிகள் உள்பட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் சோதனைக்காக நிறுத்தப்படுகின்றன.

கிராமப்புறங்களில் மக்கள் பாதுகாப்புடனும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கொலைகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை விரைவில் கண்டுபிடிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This