மீண்டும் வாய்ப்புக் கேட்டு மொட்டு எம்.பி.க்களுக்காக மகிந்தவிடம் ரணில் தூது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்கும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பொதுத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுனவிலிருந்து வந்த உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் எப்படியாவது பொதுஜன பெரமுனவை மீண்டும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு கொண்டு வருவதற்காகவே மஹிந்தவை சந்திக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது மஹிந்தவுக்கு நெருக்கமாக இருந்த பலம் வாய்ந்த செயலாளர் ஒருவரே இச்சந்திப்பிற்கு தேவையான ஆயத்தங்களையும் பின்னணியையும் தயாரித்ததாகவும் குறித்த செயலாளரினால் கிரிகோரி வீதியில் நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்ட மாளிகையில் மஹிந்த – ரணில் சந்திப்பு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் சார்பில் வேட்பாளரை முன்வைப்பீர்களா என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, தான் ஒரு வேட்பாளரை முன்வைப்பேன் என்றும் அது தம்மிக்க பெரேரா என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தம்மிக்க பெரேரா 5 வீத வாக்குகளையே பெறுவார் எனவும் ஜனாதிபதி தேர்தலில் தானே வெற்றியீட்டுவேன் எனவும் ஜனாதிபதி பதிலளித்த நிலையில், தேர்தல் முடிவுகள் வரும்போது வெற்றியாளர் யார் என்பதை நாடு பார்க்க முடியும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன்போதே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்கும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பொதுத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், தன்னிடம் பேசி இந்தப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்று யாராவது அறிவுரை கூறினால் அது நடக்காது எனவும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்வதா இல்லையா என்பதை கட்சி தீர்மானிக்கும் எனவும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.