மகிந்தவிடம் மீண்டும் ஆதரவு கோரிய ரணில்

மகிந்தவிடம் மீண்டும் ஆதரவு கோரிய ரணில்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஒருமுறை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சி எடுக்கும் முடிவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று இந்தக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடுகள் நிலவியிருந்தன. கட்சியின் ஆதரவை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும், இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில் அன்று இரவே பொதுஜன பெரமுனவின் 90 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படுவாரென என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளும் கடந்த வியாழக்கிழமை பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This