பெரமுனவின் மற்றுமொரு குழு விரைவில் ரணிலுக்கு ஆதரவு: இத்தருணத்துக்கு பொருத்தமான தலைவர்

பெரமுனவின் மற்றுமொரு குழு விரைவில் ரணிலுக்கு ஆதரவு: இத்தருணத்துக்கு பொருத்தமான தலைவர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் எஞ்சியிருக்கும் சிலரில் நாட்டை நேசிக்கும் மற்றுமொரு குழு அடுத்த சில நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மொட்டுக் கட்சியில் உள்ள பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த இந்த தீர்மானம் நாட்டை பற்றி சிந்தித்து எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும் அவர் கூறியுள்ளார்.

“ஒன்றிணைந்து வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட பியல் நிஷாந்த,

“நாங்கள் பொதுஜன பெரமுன கட்சியை இன்னும் நேசிக்கிறோம். கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் இன்னும் தயாராக உள்ளோம்.

நாடு இரத்தக் கடலாகவும், மயானமாகவும் இருந்த போது நாட்டைக் காப்பாற்றியவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. அவருடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கினோம்.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவை தொடர்ந்து நாங்கள் நேசிக்கின்றோம். ஒவ்வொரு தருணத்திலும் கட்சியை மதித்து நேசித்து எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

எமது அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

அந்த காலத்தை நாம் மறக்க மாட்டோம். அந்த சதித் திட்டத்தை அமுல்படுத்திய அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் இந்த நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் தயாராகி வருகின்றனர்.

அதன் காரணமாகவே இந்த நேரத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் பொருத்தமான மற்றும் பொறுப்பான தலைமையை தெரிவுசெய்துள்ளோம்.” என்றார்.

CATEGORIES
Share This