ஜீவனுக்காகவா சம்பளத்துக்காகவா?: தோட்டத் தொழிலாளர்களின் பணிபுறக்கணிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தடையாக செயற்படுவதாக கூறப்படும் களனிவெளி பிளான்டேஷன் உட்பட சில கம்பனிகளுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை பணிபுறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதை சில தரப்பினர் சம்பள பிரச்சினைக்காக என கூறும் போதிலும் சில தரப்பினர் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவாக போராடுவதாக தெரிவிக்கின்றனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உட்பட சிலரை கைது செய்து நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு கடந்த (22) திங்கட்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே சில சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் அமைச்சர் ஜீவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் தங்களுடைய சம்பளப் பிரிச்சினையை முடிவுக்கு கொண்டுவரக் கோரியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தோட்டத் தொழிலாளர்களை பயன்படுத்தி குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நேற்று (23) நுவரெலியா, நானு ஓயா மற்றும் டிக்கோயா ஆகிய பிரதேசங்களில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கட்சி பேதமின்றி பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இப்பணிபுறக்கணிப்பு இன்று (24) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
இந்த நிலையில், ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவித்து தலவாக்கலை மற்றும் ஹொரண பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்டத் தொழிலாளர்களும் இன்று(24) பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தலவாக்கலை பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஹொலிரூட், வட்டகொட, லோகி, கிரேட்வெஸ்டன்,பேரம்,மட்டுகலை,சமர்செட்,ரதல்லை,கிளரென்டன்,கெல்சி மஹாலியா ஆகிய தோட்டத் தொழிலாளர்கள் இவ்வாறு பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஹொரண பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ், மஸ்கெலியா பிரதேசத்தில் இயங்கும் மாநிளு,ஸ்டோக்ஹோம்,கௌரவில, ஓல்டன்,பெயார்லோன் ஆகிய தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.