பூமிக்கு மிக அருகில் வைரம் கொட்டிக் கிடக்கும் கிரகம் – ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்
விண்வெளியில் நமது பூமியைத் தாண்டி ஆயிரக்கணக்கான சூரிய குடும்பங்களும், பல இலட்சம் கிரகங்களும் இருக்கின்றன. ஆனால், மனிதர்கள் வாழும் இந்த பூமியில் நாம் உயிர் வாழத் தேவையான அத்தனையும் இருப்பதோடு, ஆடம்பரமாக வாழத் தேவையான பொருட்களும் கிடைக்கின்றன. இருப்பினும், பூமியை போன்று ஒரு கிரகம் இருக்கிறதா? அதில் மனிதனைப் போல வேறு யாரும் வாழ்கிறார்களா? என பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல், மனிதர்கள் வேறு கிரகத்தில் சென்று வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா? என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்துகின்றனர்.
அந்த வகையில், நிலவு, செவ்வாய் போன்றவற்றை ஆய்வு செய்துள்ள விஞ்ஞானிகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நமது சூரிய குடும்பத்தில் 7 மற்றும் 8வது கிரகமாக இருக்கும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களில் வைர மழை பொழிவதை உறுதி செய்தனர். இருப்பினும், அது மிகவும் தொலைவில் இருக்கும் நிலையில், அதை விட நமக்கு மிக அருகில் இருக்கும் மற்றொரு கிரகத்தில் பல மில்லியன் தொன் அளவில் வைரம் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
அதாவது நமது சூரிய குடும்பத்தில் முதலாவதாக இருக்கும் இருக்கும் புதன் கிரகம் கருப்பு கிரகம் என்று அழைக்கப்படுகிறது. புதனின் காந்தப்புலம் பூமியை விட மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. இந்த கிரகம் கருப்பாக இருப்பதற்கு, அதில் இருக்கும் கிராஃபைட் தான் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பெல்ஜியம் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் புதன் கிரகத்தின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், இவை அனைத்தும் உருகிய வடிவிலேயே இருப்பதாகவும், அவை புதன் கிரகம் முழுவதிலும் கடலைப் போல காட்சியளிப்பதாகவும் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.