தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்பு – தேசிய மக்கள் சக்தி முன்னிலை?

தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்பு – தேசிய மக்கள் சக்தி முன்னிலை?

இலங்கையின் தேர்தல் ஒன்றுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள சூழ்நிலையில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கையில் தேர்தல் கணக்கெடுப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த கணக்கெடுப்பில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP)கட்சி முன்னிலை வகிப்பதாக தெரிவித்துள்ளதாக செய்தியொன்று லங்கா ஈ நியூஸ் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், கணக்கெடுப்பு முடிவுகள் வாக்காளர் விருப்பங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் காட்டுவதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்காளர்களில் 53 வீதமானவர்கள் திசைகாட்டி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாச 24 வீத ஆதரவுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 6 வீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 5 வீதத்திற்கும் குறைவான மக்கள் ஆதரவையே பெற்றுள்ளதாகவும் லங்கா ஈ நியூஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Oruvan

இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான மிதக்கும் வாக்காளர்கள் (12%) இன்னும் எந்தக் கட்சியை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், திசைகாட்டி கட்சியின் மீதான நம்பகத்தன்மை மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுவதற்கும் நாட்டின் செழிப்பை மேம்படுத்துவதற்கும் உள்ள அர்ப்பணிப்பு காரணமாக குறித்த வாக்காளர்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி செல்வாக்கு செலுத்துவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டிள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான கணக்கெடுப்பு தொடர்பான தகவல்கள் எதுவும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்படாத நிலையில், இந்த விடயத்தின் தொடர்பில் fact seeker ஆராய்ந்து உண்மைத் தன்மையினை வெளிப்படுத்தியுள்ளது.

Oruvan

இந்த நிலையில், தம்மால் அவ்வாறான எந்தவொரு ஆய்வும் முன்னெடுக்கவில்லை எனவும், இது முற்றிலும் போலியான செய்தி எனவும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடக பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாக fact seeker தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இது குறித்து அறிவிப்பொன்றையும் விடுத்துள்ளனர்.

இதன்படி, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் தேர்தல் கருத்துக்கணிப்புகள் எதனையும் நடத்தவில்லை எனவும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

CATEGORIES
Share This