`நீங்கள் இறக்க விரும்பினால், இதுவே சிறந்த வழி’ -தற்கொலை எந்திரம் கண்டுபிடித்த சுவிஸ் ஆராய்ச்சியாளர்?
தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபட பல நாடுகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகள், தற்கொலை செய்து கொள்வோரின் நோக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு உதவுகின்றன; வலியின்றி மரணிக்க வழிவகைகளைச் செய்து தருகின்றன.
சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவர்களின் மேற்பார்வையில்லாமல், வலி தெரியாமல் மரணிக்க விரும்புவர்களுக்கென்றே சிறுரக வாகனம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம், 2019-ம் ஆண்டில் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது. பார்ப்பதற்கு விண்வெளிக்குச் செல்லும் ஓடம் போலத் தோன்றும் இந்த வாகனம், 3டி வடிவில் உள்ளது. 7.10 லட்சம் அமெரிக்க டொலர் செலவில் நெதர்லாந்தில் 12 ஆண்டுக்கால ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு சட்டம் அனுமதிக்காவிட்டாலும் கருணைக் கொலைக்கு அனுமதி உண்டு. சுயநல நோக்கமின்றி வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புவர்களும் தற்கொலை செய்து கொள்ளலாம். அங்கு இதற்கான பணிகளைச் செய்வதற்கென்றே சில அமைப்புகளும் செயல்படுகின்றன.
அத்தகைய அமைப்புகளில் ஒன்றான தி லாஸ்ட் ரிசார்ட் (Last Resort) தலைமை நிர்வாகி ஃபோரியன் வில்லட் கூறுகையில், “எங்களிடம் மக்கள் வரிசையில் நிற்பதால், எளிதாக மரணிக்க இந்த வாகனத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரும்புகிறோம். அது விரைவில் நடைபெறும்” என்றார்.
அதே நேரம், இறக்க விரும்பும் நபர் முதலில் அவர்களின் மனத்திறன் பற்றிய மனநல மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிறது சுவிட்சர்லாந்து நாட்டின் சட்டம். இறக்க விரும்பும் நபர், மரணிப்பதற்கான வாகனத்தில் ஏறி, மூடியை மூடிவிட்டு அவர்கள் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள், பொத்தானை அழுத்தினால் என்ன நடக்கிறது என்பன போன்ற தானாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இதன்பின் வாகனத்தில் உள்ள பொத்தானை அழுத்தி, மரணத்தை தேடிக் கொள்ளலாம்.
மரண வாகனத்தில் உள்ள பொத்தானை ஒருமுறை அழுத்தினால், காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு 30 விநாடிகளுக்குள் 21 சதவிகிதத்திலிருந்து 0.05 சதவிகிதமாகக் குறையும் போது, உள்ளே இருப்பவர் சிறு மாற்றத்தை உணர்வார். எனினும் சுய நினைவு இழப்பதற்கு முன்புவரை அவர் மகிழ்ச்சியாகவே இருப்பார் என்கிறார், இதன் கண்டுபிடிப்பாளரான பிலிப் நிட்ஸ்கே.
வாகனத்தில் உள்ள ஆக்ஸிஜனை நைட்ரஜனுடன் மாற்றி உடனே மரணத்தை விளைவிக்கிறது. இதற்கு கட்டணமாக 20 அமெரிக்க டொலரை செலவிட வேண்டும்.
“எந்த பீதியோ, மூச்சுத்திணறலோ இல்லாமல் மரணம் நேரிடுகிறது. வாகனத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, நபரின் இதயத் துடிப்பு மற்றும் ரத்தத்தின் ஆக்ஸிஜன் செறிவு ஆகியவற்றை வாகனம் கண்காணிக்கிறது. 30 விநாடிகளுக்குள் செயல்முறை நிறைவடைய, மரணிப்பதற்கு 5 நிமிடங்கள் முன்பாக அந்த நபர் சுய நினைவு இழந்துவிடுவார்” என்றார் பிலிப் நிட்ஸ்கே.
அதே நேரம், மரணிப்பதற்கான வாகனத்தில் ஒருவர் அமர்ந்த பிறகு எல்லா செயல்முறைகளும் தொடங்கி, திடீரென மனமாற்றம் நேரிட்டால் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு பதிலளித்த நிட்ஸ்கே, “ஒருமுறை நீங்கள் அந்த பொத்தானை அழுத்தினால், திரும்பிச் செல்ல வழி இல்லை” என்றார்.
இந்த வருடத்திற்குள் முழு பயன்பாட்டுக்கு வரும் இந்த வாகனத்தை பயன்படுத்தி இறப்போரின் விவரங்கள் மற்றவர்களுக்கு பகிரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வயது வரம்பு 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இருப்பினும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தால், இந்த வாகனத்தைப் பயன்படுத்தி மரணத்தை எதிர்கொள்ளலாம்.