“மெஸ்ஸியின் நிழல்..” எங்கு போனாலும் கண் இமைக்காமல் பாலோ செய்யும் தாடிக்காரர்.. யார் இவர்?
உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி எங்குச் சென்றாலும் ஒரு தாடிக்காரர் அவரை நிழல் போலப் பின்தொடர்வார். பலருக்கும் யார் இந்த தாடிக்காரர் என்பது தெரியாமலேயே இருந்தது. இதற்கிடையே இதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. யார் அந்த நபர்.. எதற்காக அவர் மெஸ்ஸியை பின்தொடர்கிறார். அவரது வேலை என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போது உலகில் இருக்கும் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்ஸி என்று சந்தேகமே இல்லாமல் சொல்லலாம். கால்பந்து போட்டிகளைப் பெரிதாகப் பார்க்காத ஆட்களுக்குக் கூட மெஸ்ஸி குறித்துத் தெரிந்து இருக்கும்.
இப்போது நடந்து வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரிலும் மெஸ்ஸி இடம் பெற்றுள்ள அர்ஜெண்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. அவரது ஆட்டம் களத்தில் அனல் பறக்கக் களத்திற்கு வெளியேயும் அவரைப் பற்றியே பேச்சாக இருக்கிறது.
தாடிக்காரர்: மெஸ்ஸி பொது இடங்களில் இருக்கும் போது அவருக்கு மிக நெருக்கமாக ஒருவர் இருப்பதைப் பலரும் கவனித்து இருக்கலாம். மெஸ்ஸி களத்தில் மேட்ச் ஆடிக் கொண்டு இருந்தாலும் சைட் லைனில் நடுவரைப் போல இவர் வந்து கொண்டு இருப்பார்.. யாராவது மெஸ்ஸி நெருங்க முயன்றால் முதலில் அவருக்கு முன்பு போய் நிற்பது இந்த தாடிக்காரர் தான்.
களத்திற்கு வெளியேயும் மெஸ்ஸி எங்கு சென்றாலும் அவரை நிழலாக இவர் பின் தொடர்வார். யாராவது மெஸ்ஸி உடன் உரையாடினால் படபடவென அவர்களைக் கண்களாலேயே ஸ்கேன் செய்துவிடுவார். போட்டோ எடுக்கும் போது யாராவது மெஸ்ஸி மீது கை வைத்தால் அதைத் தட்டிவிட ஒரு கை வரும்.. அது யார் என்று பார்த்தால் அதுவும் இந்த தாடிக்காரராகவே இருப்பார். யாருப்பா இது மெஸ்ஸி உடன் இப்படி 24*7 இருக்கிறாரே என்ற சந்தேகம் பலருக்கும் வரும். அதற்கான விடை இப்போது கிடைத்துள்ளது.
யார் அவர்: மெஸ்ஸி நிழல் போலப் பின்தொடரும் இவர் வேறு யாரும் இல்லை மெஸ்ஸியின் பாதுகாவலர்.. யாசின் சூகோ என்ற மெஸ்ஸியின் தனிப்பட்ட பாதுகாவலர் தான் இப்படிக் கண்ணும் கருத்துமாகத் தனது பாஸை கவனித்துக் கொண்டு இருக்கிறார். பல்வேறு சூழல்களிலும் மெஸ்ஸியை இவர் எப்படிக் காத்து வருகிறார் என்பதை விளக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் டிரெண்டானது. அதைப் பார்க்கும் அனைவரும் நிச்சயம் யாசின் சூகோவை பாராட்டுவார்கள். அந்தளவுக்கு அவரது செயல்பாடுகள் உள்ளன.
நெட்டிசன்கள்: அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், “உலகில் நீங்கள் புகழ்பெற்ற நபராக இருந்தால்.. நிச்சயம் உங்களைப் பிடிக்காத சிலரும் இருப்பார்கள். எனவே, அனைவரும் உங்களைத் தொட அனுமதிப்பது உங்களுக்கே மிகப் பெரிய ஆபத்தைத் தரும். எனவே, மெஸ்ஸி தன்னை பாதுகாக்க இதுபோன்ற நபரைத் தேர்வு செய்துள்ளது மிகச் சரியான செயல்.. இவர் தனது பாஸை எங்கிருந்தாலும் காப்பாற்றுவார் போலவே தெரிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
பின்னணி: இந்த யாசின் சூகோ அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிந்த வீரர்.. இவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடற்படை சீல் ஆக அமெரிக்க ராணுவத்திற்காக பணியாற்றுவர். டேவிட் பெக்காம் தனிப்பட்ட முறையில் மெஸ்ஸியிடம் இவரைப் பரிந்துரைத்துள்ளார். அதன் பிறகே மெஸ்ஸியை பாதுகாக்கும் பணிகளை சியூகோ தொடங்கியுள்ளார். ஆடுகளத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி மெஸ்ஸியை மேன்-மார்க் செய்வதே இவரது பணியாக இருக்கிறது.