நாடாளுமன்றத்தில் கட்சி சண்டை: சு.கவை காட்டிக்கொடுத்தது யார்?

நாடாளுமன்றத்தில் கட்சி சண்டை: சு.கவை காட்டிக்கொடுத்தது யார்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் நாளுக்கு நாள் பூதாகரமாகிவரும் பின்புலத்தில் இன்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் சில சட்டங்கள் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாத்தில் உரையாற்றி முன்னாள் ஜனாதிபதியும் சு.கவின் முன்னாள் தலைவருமான மைத்திரிபால சிறிசேன,

நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்த விடாது பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றை முறியடித்து எமது உயிர்களை தியாகம் செய்தாவது சுதந்திரக் கட்சியை பாதுகாப்போம் என தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர,

”சு.கவின் உறுப்பினர்கூட இல்லாத ஒருவருக்கு சு.கவின் தலைமை பதவியை வழங்கியிருந்தனர். இவர்கள்தான் சு.கவை பாதுகாப்பது பற்றி பேசுகின்றனர்.

தயாசிறி ஜயசேகரவின் வழக்கு பற்றி பேசுகின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கியது யார்? அவர் யாருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்?

வழக்கு தாக்கல் செய்தவருக்கும் பிரதிவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாடுகளின் பிரகாரம் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியிருக்கலாம். ஆனால், தயாசிறி ஜயசேகவுக்கு தன்னிச்சயமாக கட்சியின் அலுவலகத்துக்குள் நுழைய முடியாது.

சட்டப்பூர்வமாக கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அதற்கு எதிர்ப்பு என்றால் நீதிமன்றம் செல்ல முடியும். அவ்வாறு செய்யவில்லை.

140 இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது கட்சிக்கு இருந்தனர். இன்று கட்சிக்கு என்ன நடந்துள்ளதென அனைவருக்கும் தெரியும்.” என்றார்.

இதன்போது மீண்டும் குறுக்கிட்ட தை்திரிபால சிறிசேன, ”இந்த குழு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியமையே கட்சி பிளவுபட பிரதான காரணம். அங்கிருந்தான் அனைத்து பிளவுகளும் ஏற்பட்டன.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் சு.கவை அரசாங்கத்துடன் முடிச்சிப்போடும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச அதிகாரத்தை பயன்படுத்தி கட்சியின் அமைப்பாளர்களை சிஐடிக்கும், பொலிஸுக்கும் அழைத்துச் செயல்கின்றனர்.”என்றார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலளிக்க எழுந்நத லசந்த அழகியவண்ண, ”கட்சியை காட்டிக்கொடுத்தது நாங்கள் அல்ல. நாம் சென்றதால் கட்சி பிளவுபடவும் இல்லை. 2014ஆம் ஆண்டு அப்பத்தை சாப்பிட்டுவிட்டு கட்சியை முதலில் காட்டிக்கொடுத்தது மைத்திரிபால சிறிசேனதான்.

கட்சியின் தலைவராக இருந்து செய்ய முடியாததை வீட்டுக்குச் சென்று புலம்புவதால் செய்ய முடியாது. இது நாடாளுமன்றம் கட்சியின் விவகாரங்களை பேசும் இடம் இல்லை.” என காரசாரமாக மைத்திரியை பார்த்துக் கூறினார்.

கோபத்துடன் மீண்டும் குறிக்கிட்ட மஹிந்த அமரவீர, தாம் சுத்தமானவர்கள் போன்று இங்கு பேசுகின்றனர். அவர்கள் செய்த ஊழல்கள் மற்றும் அவற்றுக்கான ஆதாரணங்கள் உள்ளன. அவற்றை விரைவில் வெளியிடுவோம்.” என்றார்.

இவர்களை கட்டுப்படுத்த சபா பீடத்தில் இருந்த இம்ரான் மவுரூப் முயற்சித்த போதும் வாக்குவாதம் உச்சம் தொட்டது. சபையின் இருதரப்பில் இருந்து கனத்த குரல்கள் ஒலித்தன.

மீண்டும் கருத்து வெளியிட்ட லசந்த அழகியவண்ண,

”நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படவில்லை. மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவே தயாசிறி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.தற்போது அவர் தலைவர் இல்லை. ஆட்சேபனைகள் இருந்தால் எவரும் நீதிமன்றம் சென்று பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியும்.” எனக் கூறினார்.

வாதத்தை முடிக்குமாறு இம்ரான் மவுரூப் மைத்திரிபால சிறிசேனவுக்கு சந்தர்ப்பம் வழங்கிய போது, கடும் கோபத்துடன் எழுந்த அவர்,

கட்சியை காட்டிக்கொடுத்த இவர்கள்தான். இன்று தயாசிறியை பற்றி பேசுகின்றனர். கட்சியின் மத்திய குழு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள கூடாதென தீர்மானம் நிறைவேற்றிய போது கள்ளத்தனமாக அமைச்சுப் பதவியை பெற்ற இவர்களே கட்சியையும் பிளவுபடுத்தினர்.” எனக் குற்றம் சாட்டினார்.

வாக்குவாதம் உக்கிரமடைந்ததால் அதனை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் உரை பட்டியில் அடுத்து இருந்த சிவஞானம் சிறீதரன் எம்.பிக்கு உரையாற்றும் சந்தர்ப்பத்தை இம்ரான் மவுரூப் வழங்கினார்.

CATEGORIES
Share This