கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக அதிக வாய்ப்பு.. வெளியான சி.என்.என் கருத்துக்கணிப்பு
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் களம் காண்கின்றனர்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 28 ஆம் திகதி நடந்தது. ஜோ பைடன் இந்த நிகழ்ச்சியில் பலமுறை திக்கித் திணறி பேசத் தடுமாறினார். சில நொடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். 81 வயதாகும் ஜோ பைடன் சமீப காலங்களாகவே தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார்.
எனவே இந்த விவாத நிகழ்ச்சியால் பைடன் இந்த நிலைமையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பைடன் அதன்பின் ஆற்றிய உரையிலும்கூட டெலிபிராம்டரில் END OF THE QUOTE – உரை முடிந்தது என்று எழுதப்பட்டிருந்ததையும் சேர்த்து வாசித்தது சர்ச்சையாகியுள்ளது.
அவரது கட்சிக்குள்ளிருப்பவர்களே பைடன் தேர்தலில் நிற்காமல் இருப்பதே நல்லது என்று கருத்து கூறி வருகின்றனர். மேலும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிட்ச்சல் ஒபாமா பைடனுக்கு பதில் வேட்பாளராக நிற்க வேண்டும் என்றும் சிலர் விரும்புகின்றனர். பைடனின் தடுமாற்றம் அமெரிக்க மக்களிடையேயும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிஎன்என் தொலைக்காட்சி தற்போது கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி தற்போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சிஎன்என் கருத்துக்கணிப்பின்படி, டிரம்பா பைடனா என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் டிரம்புக்கும் 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவளித்துள்ளனர்.
அதேசமயம் டிரம்பா கமலா ஹாரிஸா என்ற கேள்விக்கு 47 சதவீத வாக்காளர்கள் டிரம்புக்கு ஆதரவாகவும். 45 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகலாம் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். டிரம்பை விட வெறும் 6 சதவீத வித்தியாசத்தில் மட்டுமே கமலா ஹாரிஸ் உள்ளார். டிரம்பை விட மிட்ச்சல் ஒபாமா 11 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.
ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கமலா ஹாரிஸுக்கு பெண் வாக்காளர்களின் ஆதாரவு கணிசமாக உள்ளது. எனவே கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதியாக அதிக வாய்ப்பு உள்ளது என்று இதன்மூலம் தெரியவருகிறது.