முத்தமிட்டால் பரவும் ‘முத்தக் காய்ச்சல்..!’ உயிர்க்கொல்லி நோயா?

முத்தமிட்டால் பரவும் ‘முத்தக் காய்ச்சல்..!’ உயிர்க்கொல்லி நோயா?

முத்தமிடுவதால் எச்சில் மூலம் பரவும் வைரஸ் தொற்றால் கடுமையான காய்ச்சலும் தீவிர உடல் உபாதைகளும் ஏற்படும் அபாயம் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்பை பரிமாறிக்கொள்ள முத்தமிடுவது பரவலாகப் பின்பற்றப்படும் கலாசாரமாக உள்ளது. இந்த நிலையில், எச்சில் மூலம் பரவும் ’எப்ஸ்டெய்ன்-பார் வைரஸ் (இபிவி)’ உடலிலுள்ள நாளமுள்ள சுரப்பிகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதாய் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

டொன்சில்ஸ் போலவே தென்படும் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகளுக்கு பாக்டீரியாக்களை எதிர்த்து நோயெதிர்ப்பு ஆற்றலை உடலுக்கு அளிக்கும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் எடுத்துக்கொண்டால் நோயின் தாக்கம் குணமடையாது.

டீன் ஏஜ் மற்றும் இளம் பருவத்தினரை அதிகமாக பாதிக்கும் இந்த வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்பை ‘சுரப்பி காய்ச்சல்’ என மருத்துவ உலகில் அழைக்கின்றனர். இதன் அறிகுறிகளாக,

அதீத காய்ச்சல்
கழுத்து, தலை, அக்குள், கை, கால் மூட்டுகள், இடுப்புப் பகுதிகளில் வீக்கம்
தொண்டை வறட்சி
தோல்களில் அரிப்பு
தலைவலி
உடல் சோர்வு
கழுத்துப் பகுதியில் வீக்கம் மற்றும் உடல் நடுக்கத்துடன் கூடிய அதீத காய்ச்சல் இருந்தால் கட்டாயம் ரத்தப் பரிசோதனை மூலம் எப்ஸ்டெய்ன்-பார் வைரஸால் சுரப்பி காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியலாம்.

பொது இடங்களில் பலர் ஒரே கோப்பைகளில் நீராகாரம் பருகுவது, ஒரே பாத்திரங்களை பலர் பயன்படுத்துவது, ஒரே சிகரெட்டைப் பலரும் பகிர்ந்துகொள்வது ஆகிய சுகாதாரமற்ற பழக்கங்களால் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது.

பிரிட்டனை சேர்ந்த நேவே மெக்ராவி என்ற 22 வயது இளம்பெண் மதுபானக்கூடமொன்றில் தான் சந்தித்த இளைஞர் ஒருவருக்கு முத்தமிட்டதால், அவருக்கு ’எப்ஸ்டெய்ன்-பார் வைரஸ்’ பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலை, அவர் கடுமையான தொண்டை வலி மற்றும் தொண்டை வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளார். முதலில் டான்ஸில்ஸ் பிரச்னையாக இருக்கலாம் எனக் கணித்த அவர், அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டுள்ளார்.

எனினும், தொடர்ந்து தீவிரக் காய்ச்சல், சுரப்பிகள் வீக்கம், வாந்தி அவற்றை தொடர்ந்து எழுந்து நடக்க முடியாத நிலைமை என உடல் பலவீனமாகியுள்ளது. அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனை மூலம் அந்த கல்லூரி மாணவிக்கு எப்ஸ்டெய்ன்-பார் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான 36 வயதான நடிகை விக்கி பாட்டிசன் இந்த வைரஸ் தாக்குதலால் கடந்த சில நாள்களுக்கு முன் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருப்பதாவது: கடந்த வியாழக்கிழமையன்று கடுமையான தலைவலியுடன் ஆரம்பமான உடல் உபாதை, தொடர்ந்து தொண்டை வீக்கம், அதனால் எதையும் விழுங்க முடியாத நிலை. ஒரு கட்டத்தில் என்னால் எழுந்து நகரக்கூட முடியாத நிலைமைக்கு, இந்த கிருமித் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு இட்டுச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்கினால் பாதிக்கப்பட்ட நபருக்கு அறிகுறிகள் தென்பட 7 வாரங்கள் வரை ஆகலாம். அதுவரை அவர் அறியாமலேயே பிறருக்கும் இந்த வைரஸ் பரவ அவர் காரணமாகலாம். குணமடைந்த பின்பும், சில மாதங்கள் அவரிடமிருந்து இந்த வைரஸ் பரவலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

அறிகுறிகள் இருந்தும் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், மேற்கண்ட வைரஸ் மூளை, கல்லீரல், நுரையீரலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. தீவிர ரத்தசோகை, மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம், ஆகிய தீவிர சுவாசப் பிரச்னைகளும் உண்டாகும். மஞ்சள் காமாலை உள்ளிட்ட பிற நோய்களும் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

CATEGORIES
Share This