”பூமியின் எதிர்ப்பார்ப்பு, ஜூலை மாதம் 11ஆம் திகதி கொழும்பில்”: தலைநகர் வீதிகளில் சுவரொட்டிகள்
”பூமியின் எதிர்ப்பார்ப்பு, ஜூலை மாதம் 11ஆம் திகதி கொழும்பில்”: தலைநகர் வீதிகளில் சுவரொட்டிகள்
இலங்கைத்தீவில் அரசியல் மேடை சூடு பிடித்து வரும் நிலையில், புதுப் புது மாற்றங்கள் , புதுப் புது கொள்கைகள், ஆங்காங்கே நடக்கும் மாநாடுகள், பல உறுதிகள் என ஒவ்வொரு நாளும் புதிய புதிய தலைப்புகளுடன் அரசியல் களம் நிரம்பி வழிகிறது.
அடுத்து என்ன நடக்கும் என்பது தொடர்பில் எந்தவித எதிர்ப்பார்ப்பும் வைக்க முடியாத அளவுக்கு பல மாற்றங்களும் கட்சித் தாவல்களும் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்களின் வாக்குகளை வெல்வதில் ஒரு தரப்பினரும் , பெறும் வாக்குகளை குறைக்கும் செயற்பாட்டில் மற்றுமொரு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில், ” பூமியின் எதிர்ப்பார்ப்பு, எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி கொழும்பில்” எனக் குறிப்பிட்டு தலைநகர் கொழும்பின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இது யார் தரப்பிலிருந்து ஒட்டப்பட்டுள்ளது என்பது தொடர்பில் எந்த வித தகவலும் தெரியவில்லை.
வெள்ளை நிற தாளில், மஞ்சள் , நீலம், பச்சை , கபிலம் மற்றும் ஒரஞ்ச் நிறங்களில் காட்சிப்படுத்தும் இந்த சுவரொட்டி தொடர்பில் தற்போது சமூக ஊடகங்களில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில், “இதோ ஒரு நற்செய்தி“ எனக் குறிப்பிட்டு கொழும்பின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த நிலையில் அதற்கு ஏற்றாற் போலவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டிற்கான நற்செய்தியை வழங்கியிருந்தார்.
எவ்வாறாயினும், இதுவும் அது போன்ற ஒரு சுவரொட்டி விளம்பரமா அல்லது போலியான சுவரொட்டிகளா என்பதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இலங்கைத்தீவு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்களும், மாநாடுகளும் நடைப்பெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் மாத்தறையில் ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து ரணிலின் பிரச்சார மாநாடு இடம்பெற்றிருந்தது.
எனவே, இதுவும் கொழும்பில் மாநாட்டிற்கான விளம்பரமா எனவும் பேசப்பட்டு வருகிறது.